திருநெல்வாயில்:

<– சோழ நாடு (காவிரி வடகரை)

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(சம்பந்தர் தேவாரம்):

(1)
புடையினார் புள்ளி கால் பொருந்திய
மடையினார் மணி நீர் நெல்வாயிலார்
நடையினால் விரற் கோவணம் நயந்து
உடையினார் எமது உச்சியாரே
(2)
வாங்கினார் மதில்மேல் கணை, வெள்ளம்
தாங்கினார், தலையாய தன்மையர்
நீங்கு நீர் நெல்வாயிலார், தொழ
ஓங்கினார் எமது உச்சியாரே
(3)
நிச்சலேத்து நெல்வாயிலார் தொழ
இச்சையால் உறைவார் எம் ஈசனார்
கச்சையாவதோர் பாம்பினார், கவின்
இச்சையார் எமது உச்சியாரே
(4)
மறையினார், மழு வாளினார், மல்கு
பிறையினார், பிறையோடிலங்கிய
நிறையினார, நெல்வாயிலார், தொழும்
இறைவனார் எமது உச்சியாரே
(5)
விருத்தனாகி வெண்ணீறு பூசிய
கருத்தனார், கனலாட்டு உகந்தவர்
நிருத்தனார், நெல்வாயில் மேவிய
ஒருத்தனார் எமது உச்சியாரே
(6)
காரினார் கொன்றைக் கண்ணியார், மல்கு
பேரினார், பிறையோடிலங்கிய
நீரினார், நெல்வாயிலார், தொழும்
ஏரினார் எமது உச்சியாரே
(7)
ஆதியார் அந்தமாயினார், வினை
கோதியார் மதில் கூட்டழித்தவர்
நீதியார், நெல்வாயிலார், மறை
ஓதியார் எமது உச்சியாரே
(8)
பற்றினான் அரக்கன் கயிலையை
ஒற்றினார் ஒரு கால் விரலுற
நெற்றியார, நெல்வாயிலார், தொழும்
பெற்றியார் எமது உச்சியாரே
(9)
நாடினார் மணிவண்ணன் நான்முகன்
கூடினார் குறுகாத கொள்கையர்
நீடினார், நெல்வாயிலார், தலை
ஓடினார் எமது உச்சியாரே
(10)
குண்டமண் துவர்க்கூறை மூடர் சொல்
பண்டமாக வையாத பண்பினர்
விண்தயங்கு நெல்வாயிலார், நஞ்சை
உண்ட கண்டர் எம் உச்சியாரே
(11)
நெண்பயங்கு நெல்வாயில் ஈசனைச்
சண்பை ஞானசம்பந்தன் சொல்இவை
பண்பயன் கொளப் பாட வல்லவர்
விண்பயன் கொளும் வேட்கையாளரே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page