(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)
(சம்பந்தர் தேவாரம்):
(1)
அறத்தால் உயிர்காவல் அமர்ந்தருளி
மறத்தால் மதில்மூன்றுடன் மாண்பழித்த
திறத்தால் தெரிவெய்திய, தீ வெண்திங்கள்
நிறத்தான், நெல்லிக்காவுள் நிலாயவனே
(2)
பதிதான் இடுகாடு, பைங்கொன்றை தொங்கல்
மதிதானது சூடிய மைந்தனும், தான்
விதிதான், வினைதான், விழுப்பம் பயக்கும்
நெதிதான், நெல்லிக்காவுள் நிலாயவனே
(3)
நலந்தான் அவன், நான்முகன்தன் தலையைக்
கலந்தான், அது கொண்ட கபாலியும்தான்
புலந்தான், புகழால் எரிவிண் புகழும்
நிலந்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே
(4)
தலை தானதேந்திய தம் அடிகள்
கலைதான் திரிகாடிடம் நாடிடம்
மலைதான் எடுத்தான் மதில்மூன்றுடைய
நிலைதான் நெல்லிக்காவுள் நிலாயவனே
(5)
தவம்தான் கதிதான், மதிவார் சடைமேல்
உவந்தான், சுறவேந்தன் உருவழியச்
சிவந்தான், செயச் செய்து செறுத்துலகில்
நிவந்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே
(6)
வெறியார் மலர்க் கொன்றையந்தார் விரும்பி
மறியார் மலை மங்கை மகிழ்ந்தவன் தான்
குறியால் குறிகொண்டவர் போய்க் குறுகும்
நெறியான் நெல்லிக்காவுள் நிலாயவனே
(7)
பிறைதான் சடைச் சேர்த்திய எந்தை பெம்மான்
இறைதான் இறவாக் கயிலைம் மலையான்
மறைதான் புனல் ஒண்மதி மல்கு சென்னி
நிறைதான் நெல்லிக்காவுள் நிலாயவனே
(8)
மறைத்தான் பிணி மாதொரு பாகம் தன்னை
மிறைத்தான் வரையால் அரக்கன் மிகையைக்
குறைத்தான், சடைமேல் குளிர்கோல் வளையை
நிறைத்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே
(9)
தழல் தாமரையான் வையந்தாயவனும்
கழல்தான் முடிகாணிய நாணொளிரும்
அழல்தான், அடியார்க்கருளாய்ப் பயக்கும்
நிழல்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே
(10)
கனத்தார் திரை மாண்டழல் கான்ற நஞ்சை
என்அத்தா என, வாங்கி அதுண்ட கண்டன்
மனத்தால் சமண் சாக்கியர் மாண்பழிய
நினைத்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே
(11)
புகரேதும் இலாத புத்தேள் உலகில்
நிகரா நெல்லிக்காவுள் நிலாயவனை
நகரா நலஞான சம்பந்தன் சொன்ன
பகர்வாரவர் பாவம் இலாதவரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...