(1)
காலனை வீழச் செற்ற கழலடி இரண்டும் வந்தென்
மேலவா இருக்கப் பெற்றேன், மேதகத் தோன்றுகின்ற
கோல நெய்த்தானம் என்னும் குளிர்பொழில் கோயில் மேய
நீலம் வைத்தனைய கண்ட, நினைக்குமா நினைக்கின்றேனே
(2)
காமனை அன்று கண்ணால் கனலெரியாக நோக்கித்
தூமமும் தீபம் காட்டித் தொழுமவர்க்கு அருள்கள் செய்து
சேம நெய்த்தானம் என்னும் செறிபொழில் கோயில் மேய
வாமனை நினைந்த நெஞ்சம் வாழ்வுற நினைந்தவாறே
(3)
பிறைதரு சடையின் மேலே பெய்புனல் கங்கை தன்னை
உறைதர வைத்த எங்கள் உத்தமன் ஊழியாய
நிறைதரு பொழில்கள் சூழநின்ற நெய்த்தானமென்று
குறைதரும் அடியவர்க்குக் குழகனைக் கூடலாமே
(4)
வடிதரு மழுவொன்றேந்தி, வார்சடை மதியம் வைத்துப்
பொடிதரு மேனி மேலே, புரிதரு நூலர் போலும்
நெடிதரு பொழில்கள் சூழ, நின்ற நெய்த்தான மேவி
அடிதரு கழல்கள்ஆர்ப்ப ஆடும்எம் அண்ணலாரே
(5)
காடிடமாக நின்று கனலெரி கையிலேந்திப்
பாடிய பூதம்சூழப் பண்ணுடன் பலவும் சொல்லி
ஆடிய கழலர் சீரார்ந்த நெய்த்தானம் என்றும்
கூடிய குழகனாரைக் கூடுமாறறிகிலேனே
(6)
வானவர் வணங்கியேத்தி வைகலும் மலர்க தூவத்
தானவர்க்கருள்கள் செய்யும் சங்கரன் செங்கண்ஏற்றன்
தேனமர் பொழில்கள் சூழத் திகழு நெய்த்தான மேய
கூனிள மதியினானைக் கூடுமாறறிகிலேனே
(7)
காலதிர் கழல்கள்ஆர்ப்பக் கனலெரி கையில் வீசி
ஞாலமும் குழிய நின்று நட்டமதாடுகின்ற
மேலவர் முகடுதோய விரிசடை திசைகள் பாய
மாலொரு பாகமாக மகிழ்ந்த நெய்த்தானனாரே
(8)
பந்தித்த சடையின் மேலே பாய்புனல் அதனை வைத்து
அந்திப் போதனலும் ஆடி அடிகளை ஆறு புக்கார்
வந்திப்பார் வணங்கி நின்று வாழ்த்துவார் வாயினுள்ளார்
சிந்திப்பார் சிந்தையுள்ளார் திருந்து நெய்த்தானனாரே
(9)
சோதியாய்ச் சுடரும் ஆனார், சுண்ணவெண் சாந்து பூசி
ஓதிவாய் உலகமேத்த உகந்துதாம் அருள்கள் செய்வார்
ஆதியாய் அந்தமானார், யாவரும் இறைஞ்சி ஏத்த
நீதியாய் நியமமாகி நின்ற நெய்த்தானனாரே
(10)
இலையுடைப் படைகை ஏந்தும் இலங்கையர் மன்னன் தன்னைத்
தலையுடன் அடர்த்து மீண்டே தானவற்கருள்கள் செய்து
சிலையுடன் கணையைச் சேர்த்துத் திரிபுரம் எரியச் செற்ற
நிலையுடை அடிகள் போலும் நின்ற நெய்த்தானனாரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...