(1)
மெய்த்தானத்தகம்படியுள் ஐவர் நின்று
வேண்டிற்றுக் குறைமுடித்து வினைக்குக் கூடாம்
இத்தானத்து இருந்திங்ஙன் உய்வான் எண்ணும்
இதனையொழி இயம்பக்கேள் ஏழை நெஞ்சே
மைத்தான நீள்நயனி பங்கன், வங்கம்
வருதிரைநீர் நஞ்சுண்ட கண்டன் மேய
நெய்த்தான நன்னகர் என்றேத்தி நின்று
நினையுமா நினைந்தக்கால் உய்யலாமே
(2)
ஈண்டா இரும்பிறவித் துறவா ஆக்கை
இதுநீங்கலாம் விதியுண்டு என்று சொல்ல
வேண்டாவே நெஞ்சமே விளம்பக் கேள்நீ
விண்ணவர்தம் பெருமானார் மண்ணிலென்னை
ஆண்டான்அன்று அருவரையால் புரமூன்றெய்த
அம்மானை, அரி அயனும் காணா வண்ணம்
நீண்டான்உறை துறைநெய்த்தானம் என்று
நினையுமா நினைந்தக்கால் உய்யலாமே
(3)
பரவிப் பலபலவும் தேடியோடிப்
பாழாம் குரம்பையிடைக் கிடந்து வாளா
குரவிக் குடிவாழ்க்கை வாழ எண்ணிக்
குலைகை தவிர்நெஞ்சே கூறக்கேள்நீ
இரவிக் குலமுதலா வானோர் கூடி
எண்ணிறந்த கோடி அமரர்ஆயம்
நிரவிக்கரியவன் நெய்த்தானம் என்று
நினையுமா நினைந்தக்கால் உய்யலாமே
(4)
அலையார் வினைத்திறஞ்சேர் ஆக்கையுள்ளே
அகப்பட்டுள் ஆசையெனும் பாசம் தன்னுள்
தலையாய்க் கடையாகும் வாழ்வில் ஆழ்ந்து
தளர்ந்துமிக நெஞ்சமே அஞ்ச வேண்டா
இலையார் புனக்கொன்றை எறிநீர்த் திங்கள்
இருஞ்சடைமேல் வைத்துகந்தான் இமையோர் ஏத்தும்
நிலையான் உறைநிறை நெய்த்தானம் என்று
நினையுமா நினைந்தக்கால் உய்யலாமே
(5)
தினைத்தனையோர் பொறையிலா உயிர்போம் கூட்டைப்
பொருளென்று மிகஉன்னி மதியால்இந்த
அனைத்துலகும் ஆளலாம் என்று பேசும்
ஆங்காரம் தவிர்நெஞ்சே, அமரர்க்காக
முனைத்துவரு மதில்மூன்றும் பொன்றஅன்று
முடுகிய வெஞ்சிலை வளைத்துச் செந்தீ மூழ்க
நினைத்த பெருங்கருணையன் நெய்த்தானம் என்று
நினையுமா நினைந்தக்கால் உய்யலாமே
(6)
மிறைபடும் இவ்வுடல் வாழ்வை மெய்யென்றெண்ணி
வினையிலே கிடந்தழுந்தி வியவேல் நெஞ்சே
குறைவுடையார் மனத்துளான் குமரன் தாதை
கூத்தாடும் குணமுடையான், கொலைவேல் கையான்
அறைகழலும் திருவடிமேல் சிலம்பும் ஆர்ப்ப
அவனிதலம் பெயரவரு நட்டம் நின்ற
நிறைவுடையான் இடமாம் நெய்த்தானம் என்று
நினையுமா நினைந்தக்கால் உய்யலாமே
(7)
பேசப் பொருளலாப் பிறவி தன்னைப்
பெரிதென்றுன் சிறுமனத்தால் வேண்டி ஈண்டு
வாசக் குழல்மடவார் போகமென்னும்
வலைப்பட்டு வீழாதே, வருக நெஞ்சே
தூசக் கரியுரித்தான் தூநீறாடித்
துதைந்திலங்கு நூல்மார்பன், தொடரகில்லா
நீசர்க்கு அரியவன் நெய்த்தானம் என்று
நினையுமா நினைந்தக்கால் உய்யலாமே
(8)
அஞ்சப் புலன் இவற்றால்ஆட்ட ஆட்டுண்டு
அருநோய்க்கு இடமாய உடலின் தன்மை
தஞ்சம் எனக்கருதித் தாழேல் நெஞ்சே
தாழக் கருதுதியே தன்னைச் சேரா
வஞ்ச மனத்தவர்கள் காணவொண்ணா
மணிகண்டன் வானவர்தம் பிரான் என்றேத்தும்
நெஞ்சர்க்கினியவன் நெய்த்தானம் என்று
நினையுமா நினைந்தக்கால் உய்யலாமே
(9)
பொருந்தாத உடலகத்தில் புக்க ஆவி
போமாறு அறிந்தறிந்தே புலைவாழ் உன்னி
இருந்தாங்கு இடர்ப்படநீ வேண்டா நெஞ்சே
இமையவர்தம் பெருமான் என்றுமையாள் அஞ்சக்
கருந்தாள் மதகரியை வெருவச் சீறும்
கண்ணுதல் கண்டமராடிக் கருதார் வேள்வி
நிரந்தரமா இனிதுறை நெய்த்தானம் என்று
நினையுமா நினைந்தக்கால் உ ய்யலாமே
(10)
உரித்தன்று உனக்கிவ்வுடலின் தன்மை
உண்மை உரைத்தேன் விரதமெல்லாம்
தரிந்தும் தவமுயன்றும் வாழா நெஞ்சே
தம்மிடையில் இல்லார்க்கு ஒன்றல்லார்க்கு அன்னன்
எரித்தான் அனலுடையான் எண்தோளானே
எம்பெருமான் என்றேத்தா இலங்கைக் கோனை
நெரித்தானை, நெய்த்தானம் மேவினானை
நினையுமா நினைந்தக்கால் உய்யலாமே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...