(1)
ஊர்வதோர் விடை ஒன்றுடையானை
ஒண்ணுதல் தனிக் கண்ணுதலானைக்
காரதார் கறைமா மிடற்றானைக்
கருதலார் புரம் மூன்றெரித்தானை
நீரில் வாளை வரால் குதிகொள்ளும்
நிறைபுனல் கழனிச் செல்வ நீடூர்ப்
பாருளார் பரவித்தொழ நின்ற
பரமனைப் பணியா விடலாமே
(2)
துன்னு வார்சடைத் தூமதியானைத்
துயக்குறா வகை தோன்றுவிப்பானைப்
பன்னு நான்மறை பாடவல்லானைப்
பார்த்தனுக்கருள் செய்த பிரானை
என்னை இன்னருள் எய்துவிப்பானை
ஏதிலார் தமக்கு ஏதிலன் தன்னைப்
புன்னை மாதவி போதலர் நீடூர்ப்
புனிதனைப் பணியா விடலாமே
(3)
கொல்லும் மூவிலை வேலுடையானைக்
கொடிய காலனையும் குமைத்தானை
நல்லவா நெறி காட்டுவிப்பானை
நாளும் நாம் உகக்கின்ற பிரானை
அல்லலில் அருளே புரிவானை
ஆடு நீர்வயல் சூழ்புனல் நீடூர்க்
கொல்லை வெள்ளெருதேற வல்லானைக்
கூறி நாம் பணியா விடலாமே
(4)
தோடு காதிடு தூநெறியானைத்
தோற்றமும் துறப்பாயவன் தன்னைப்
பாடு மாமறை பாட வல்லானைப்
பைம்பொழில் குயில் கூவிட மாடே
ஆடு மாமயில் அன்னமொடு ஆட
அலைபுனல் கழனித் திருநீடூர்
வேடனாய பிரானவன் தன்னை
விரும்பி நாம் பணியா விடலாமே
(5)
குற்றமொன்று அடியார் இலரானால்
கூடுமாறு தனைக் கொடுப்பானைக்
கற்ற கல்வியிலும் இனியானைக்
காணப் பேணும் அவர்க்கெளியானை
முற்ற அஞ்சும் துறந்திருப்பானை
மூவரின் முதலாயவன் தன்னைச்
சுற்று நீர்வயல் சூழ்திரு நீடூர்த்
தோன்றலைப் பணியா விடலாமே
(6)
காடிலாடிய கண்ணுதலானைக்
காலனைக் கடிந்திட்ட பிரானைப்
பாடியாடும் பரிசே புரிந்தானைப்
பற்றினோடு சுற்றம் ஒழிப்பானைத்
தேடி மாலயன் காண்பரியானைச்
சித்தமும் தெளிவார்க்கெளியானைக்
கோடி தேவர்கள் கும்பிடு நீடூர்க்
கூத்தனைப் பணியா விடலாமே
(7)
விட்டிலங்கெரியார் கையினானை
வீடிலாத வியன் புகழானைக்
கட்டுவாங்கம் தரித்த பிரானைக்
காதிலார் கனகக் குழையானை
விட்டிலங்கு புரிநூல் உடையானை
வீந்தவர் தலையோடு கையானைக்
கட்டியின் கரும்போங்கிய நீடூர்க்
கண்டு நாம் பணியா விடலாமே
(8)
மாயமாய மனம் கெடுப்பானை
மனத்துளே மதியாய் இருப்பானைக்
காய மாயமும் ஆக்குவிப்பானைக்
காற்றுமாய்க் கனலாய்க் கழிப்பானை
ஓயுமாறுறு நோய் புணர்ப்பானை
ஒல்லை வல்வினைகள் கெடுப்பானை
வேய்கொள் தோள் உமைபாகனை, நீடூர்
வேந்தனைப் பணியா விடலாமே
(9)
கண்டமும் கறுத்திட்ட பிரானைக்
காணப் பேணும் அவர்க்கெளியானைத்
தொண்டரைப் பெரிதும் உகப்பானைத்
துன்பமும் துறந்து இன்பினியானைப்
பண்டை வல்வினைகள் கெடுப்பானைப்
பாக மாமதி ஆனவன் தன்னைக்
கெண்டை வாளை கிளர்புனல் நீடூர்க்
கேண்மையால் பணியா விடலாமே
(10)
அல்லல் உள்ளன தீர்த்திடுவானை
அடைந்தவர்க்கு அமுதாயிடுவானைக்
கொல்லை வல்லரவம் அசைத்தானைக்
கோலமார் கரியின் உரியானை
நல்லவர்க்கணியானவன் தன்னை
நானும் காதல் செய்கின்ற பிரானை
எல்லி மல்லிகையே கமழ் நீடூர்
ஏத்தி நாம் பணியா விடலாமே
(11)
பேரோர் ஆயிரமும் உடையானைப்
பேசினால் பெரிதும் இனியானை
நீரூர் வார்சடை நின்மலன் தன்னை
நீடூர் நின்றுகந்திட்ட பிரானை
ஆரூரன்அடி காண்பதற்கு அன்பாய்
ஆதரித்து அழைத்திட்ட இம்மாலை
பாரூரும் பரவித் தொழவல்லார்
பத்தராய் முத்தி தாம் பெறுவாரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...