திருநின்றியூர் – சுந்தரர் தேவாரம் (2):

<– திருநின்றியூர்

(1)
அற்றவனார் அடியார் தமக்கு, ஆயிழை பங்கினராம்
பற்றவனார், எம் பராபரர் என்று பலர் விரும்பும்
கொற்றவனார், குறுகாதவர் ஊர் நெடு வெஞ்சரத்தால்
செற்றவனார்க்கிடமாவது நம்திரு நின்றியூரே
(2)
வாசத்தினார், மலர்க் கொன்றை உள்ளார், வடிவார்ந்த நீறு
பூசத்தினார், புகலிந்நகர் போற்றும் எம் புண்ணியத்தார்
நேசத்தினால் என்னை ஆளும் கொண்டார், நெடுமாகடல் சூழ்
தேசத்தினார்க்கிடமாவது நம்திரு நின்றியூரே
(3)
அங்கையில் மூவிலை வேலர், அமரர் அடிபரவச்
சங்கையை நீங்க அருளித் தடங்கடல் நஞ்சமுண்டார்
மங்கையொர் பாகர் மகிழ்ந்த இடம், வளம் மல்குபுனல்
செங்கயல் பாயும் வயல் பொலியும் திருநின்றியூரே
(4)
ஆறுகந்தார், அங்கம் நான்மறையார், எங்குமாகி அடல்
ஏறுகந்தார், இசை ஏழுகந்தார், முடிக்கங்கை தன்னை
வேறுகந்தார், விரி நூலுகந்தார், பரி சாந்தமதா
நீறுகந்தார் உறையும் இடமாம் திருநின்றியூரே
(5)
வஞ்சம் கொண்டார் மனம் சேரகில்லார், நறுநெய் தயிர்பால்
அஞ்சும் கொண்டாடிய வேட்கையினார், அதிகைப் பதியே
தஞ்சம் கொண்டார், தமக்கென்றும் இருக்கை சரணடைந்தார்
நெஞ்சம் கொண்டார்க்கிடமாவது நம்திரு நின்றியூரே
(6)
ஆர்த்தவர் ஆடரவம், அரைமேல் புலி ஈருரிவை
போர்த்தவர், ஆனையின் தோலுடல் வெம்புலால் கையகலப்
பார்த்தவர், இன்னுயிர் பார் படைத்தான் சிரம் அஞ்சிலொன்றைச்
சேர்த்தவருக்குறையும் இடமாம் திருநின்றியூரே
(7)
தலையிடையார் பலி சென்று அகந்தோறும் திரிந்த செல்வர்
மலையுடையாள் ஒரு பாகம் வைத்தார், கற்றுதைந்த நன்னீர்
அலையுடையார், சடை எட்டும் சுழல அருநடஞ்செய்
நிலையுடையார் உறையும் இடமாம் திருநின்றியூரே
(8)
எட்டுகந்தார் திசை, ஏழுகந்தார் எழுத்தாறும், அன்பர்
இட்டுகந்தார் மலர்ப் பூசை இச்சிக்கும் இறைவர், முன்னாள்
பட்டுகும் பாரிடைக் காலனைக் காய்ந்து, பலிஇரந்தூண்
சிட்டுகந்தார்க்கிடமாவது நம்திரு நின்றியூரே
(9)
காலமும் ஞாயிறுமாகி நின்றார், கழல் பேணவல்லார்
சீலமும் செய்கையும் கண்டுகப்பார், அடி போற்றிசைப்ப
மாலொடு நான்முகன் இந்திரன் மந்திரத்தால் வணங்க
நீல நஞ்சுண்டவருக்கிடமாம் திருநின்றியூரே
(10)
வாயார் மனத்தால் நினைக்கும் அவருக்கு அருந்தவத்தில்
தூயார், சுடுபொடி ஆடிய மேனியர், வானில் என்றும்
மேயார், விடையுகந்தேறிய வித்தகர், பேர்ந்தவர்க்குச்
சேயார், அடியார்க்கணியவர் ஊர் திருநின்றியூரே
(11)
சேரும் புகழ்த்தொண்டர் செய்கையறாத் திருநின்றியூரில்
சீரும் சிவகதியாய் இருந்தானைத், திருநாவல்
ஆரூரன் உரைத்த உறுதமிழ் பத்தும் வல்லார் வினைபோய்ப்
பாரும் விசும்பும் தொழப் பரமன்அடி கூடுவரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page