திருநாவலூர்:

(குறிப்பு: சுந்தரரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

சுந்தரர் தேவாரம்:

(1)
கோவலன் நான்முகன் வானவர் கோனும் குற்றேவல் செய்ய
மேவலர் முப்புரம் தீயெழுவித்தவர் ஓரம்பினால்
ஏவலனார், வெண்ணெய் நல்லூரில் வைத்தெனை ஆளுங்கொண்ட
நாவலனார்க்கிடமாவது நம்திரு நாவலூரே

(2)
தன்மையினால் அடியேனைத்தாம் ஆட்கொண்ட நாட்சபைமுன்
வன்மைகள் பேசிட வன்தொண்டன் என்பதோர் வாழ்வு தந்தார்
புன்மைகள் பேசவும் பொன்னைத் தந்தென்னைப் போகம் புணர்த்த
நன்மையினார்க்கிடமாவது நம்திரு நாவலூரே

(3)
வேகம் கொண்டோடிய வெள்விடை ஏறியோர் மெல்லியலை
ஆகம்கொண்டார், வெண்ணெய் நல்லூரில் வைத்தெனை ஆளுங்கொண்டார்
போகம் கொண்டார் கடற்கோடியின் மோடியைப், பூண்பதாக
நாகம் கொண்டார்க்கிடமாவது நம்திரு நாவலூரே

(4)
அஞ்சும் கொண்டாடுவர் ஆவினில், சேவினை ஆட்சிகொண்டார்
தஞ்சம் கொண்டார் அடிச்சண்டியைத் தாமென வைத்துகந்தார்
நெஞ்சம் கொண்டார், வெண்ணெய் நல்லூரில் வைத்தெனை ஆளுங்கொண்டு
நஞ்சம் கொண்டார்க்கிடமாவது நம்திரு நாவலூரே

(5)
உம்பரார் கோனைத் திண்தோள் முரித்தார், உரித்தார் களிற்றைச்
செம்பொனார் தீவண்ணர், தூவண்ண நீற்றர், ஓர் ஆவணத்தால்
எம்பிரானார் வெண்ணெய்நல்லூரில் வைத்தெனை ஆளுங்கொண்ட
நம்பிரானார்க்கிடமாவது நம்திரு நாவலூரே

(6)
கோட்டம் கொண்டார் குடமூக்கிலும்  கோவலும் கோத்திட்டையும்
வேட்டம் கொண்டார், வெண்ணெய் நல்லூரில் வைத்தெனை ஆளுங்கொண்டார்
ஆட்டம் கொண்டார் தில்லைச் சிற்றம்பலத்தே, அருக்கனை முன்
நாட்டம் கொண்டார்க்கிடமாவது நம்திரு நாவலூரே

(7)
தாயவளாய்த் தந்தைஆகிச், சாதல் பிறத்தலின்றிப்
போயகலாமைத் தன் பொன்னடிக்கென்னைப் பொருந்த வைத்த
வேயவனார், வெண்ணெய் நல்லூரில் வைத்தெனை ஆளுங்கொண்ட
நாயகனார்க்கிடமாவது நம்திரு நாவலூரே

(8)
வாயாடி மாமறைஓதி ஓர் வேதியனாகிவந்து
தீயாடியார், சினக்கேழலின் பின்சென்றோர் வேடுவனாய்
வேயாடியார், வெண்ணெய் நல்லூரில் வைத்தெனை ஆளுங்கொண்ட
நாயாடியார்க்கிடமாவது நம்திரு நாவலூரே

(9)
படமாடு பாம்பணையானுக்கும், பாவை நல்லாள் தனக்கும்
வடமாடு மால்விடை ஏற்றுக்கும் பாகனாய் வந்தொருநாள்
இடமாடியார், வெண்ணெய்நல்லூரில் வைத்தெனை ஆளுங்கொண்ட
நடமாடியார்க்கிடமாவது நம்திரு நாவலூரே

(10)
மிடுக்குண்டு என்றோடியோர் வெற்பெடுத்தான் வலியை நெரித்தார்
அடக்கம் கொண்டு ஆவணம் காட்டிநல் வெண்ணெயூர் ஆளுங்கொண்டார்
தடுக்க ஒண்ணாததோர் வேழத்தினை உரித்திட்டுமையை
நடுக்கம் கண்டார்க்கிடமாவது நம்திரு திருநாவலூரே

(11)
நாதனுக்கூர் நமக்கூர், நரசிங்க முனையரையன்
ஆதரித்தீசனுக்கு ஆட்செயும் ஊர், அணி நாவலூர் என்று
ஓதநல் தக்க வன்தொண்டன் ஆரூரன் உரைத்த தமிழ்
காதலித்தும் கற்றும் கேட்பவர் தம்வினை கட்டறுமே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page