திருநாரையூர் – சம்பந்தர் தேவாரம் (1):

<– திருநாரையூர்

(1)
உரையினில் வந்தபாவம், உணர் நோய்கள், உம்ம செயல்தீங்கு குற்றம் உலகில்
வரையில்நிலாமை செய்தஅவை தீரும், வண்ண மிகஏத்தி நித்த நினைமின்
வரைசிலையாக அன்று மதில் மூன்றெரித்து, வளர்கங்குல் நங்கை வெருவத்
திரையொலி நஞ்சமுண்ட சிவன்மேய செல்வத் திருநாரையூர் கைதொழவே
(2)
ஊனடைகின்ற குற்ற முதலாகி, உற்ற பிணிநோய் ஒருங்கும், உயரும்
வானடைகின்ற வெள்ளை மதிசூடு சென்னி, விதியான வேத விகிர்தன்
கானிடையாடி, பூதப் படையான், இயங்கு விடையான், இலங்கு முடிமேல்
தேனடை வண்டுபாடு சடை அண்ணல் நண்ணு திருநாரையூர் கைதொழவே
(3)
ஊரிடை நின்றுவாழும் உயிர்செற்ற காலன் துயருற்ற தீங்கு விரவிப்
பாரிடை மெள்ளவந்து பழியுற்ற வார்த்தை ஒழிவுற்ற வண்ணம் அகலும்
போரிடை அன்றுமூன்று மதிலெய்த ஞான்று, புகழ் வானுளோர்கள் புணரும்
தேரிடை நின்ற எந்தை பெருமான் இருந்த திருநாரையூர் கைதொழவே
(4)
தீயுறவாய ஆக்கை, அதுபற்றி வாழும் வினை செற்றவுற்ற உலகின்
தாயுறு தன்மையாய தலைவன் தன் நாமம் நிலையாக நின்று மருவும்
பேயுறவாய கானில் நடமாடி, கோல விடமுண்ட கண்டன், முடிமேல்
தேய்பிறை வைத்துகந்த சிவன்மேய செல்வத் திருநாரையூர் கை தொழவே
(5)
வசை அபராதமாய உவரோதம் நீங்கும், தவமாய தன்மை வரும், வான்
மிசையவர் ஆதியாய திருமார்பிலங்கு விரிநூலர், விண்ணு நிலனும்
இசையவர், ஆசிசொல்ல இமையோர்கள் ஏத்தி, அமையாத காதலொடுசேர்
திசையவர் போற்றநின்ற சிவன்மேய செல்வத் திருநாரையூர் கைதொழவே
(6)
உறைவளர் ஊனிலாய உயிர்நிற்கும் வண்ணம் உணர்வாக்கும், உண்மையுலகில்
குறைவுளவாகி நின்ற குறைதீர்க்கும், நெஞ்சில் நிறைவாற்று நேசம் வளரும்
மறைவளர் நாவன், மாவின் உரிபோர்த்த மெய்யன், அரவார்த்த அண்ணல் கழலே
திறைவளர் தேவர் தொண்டின் அருள்பேண நின்ற திருநாரையூர் கைதொழவே
(7)
தனம்வரும், நன்மையாகும், தகுதிக்குழந்து வருதிக்குழன்ற உடலின்
இனம்வளர் ஐவர்செய்யும் வினயங்கள் செற்று நினைவொன்றும், சிந்தை பெருகும்
முனமொரு காலம் மூன்றுபுரம் வெந்து மங்கச் சரமுன்றெரிந்த அவுணர்
சினமொரு காலழித்த சிவன்மேய செல்வத் திருநாரையூர் கைதொழவே
(8)
உருவரைகின்ற நாளில் உயிர்கொள்ளும் கூற்ற நனியஞ்சும், ஆதலுறநீர்
மருமலர் தூவியென்றும் வழிபாடு செய்ம்மின், இழிபாடிலாத கடலின்
அருவரை சூழிலங்கை அரையன் தன்வீரம் அழியத் தடக்கை முடிகள்
திருவிரல் வைத்துகந்த சிவன்மேய செல்வத் திருநாரையூர் கைதொழவே
(9)
வேறுயர் வாழ்வு தன்மை, வினைதுக்கம் மிக்க பகை தீர்க்கும், மேய வுடலில்
தேறிய சிந்தை வாய்மை தெளிவிக்க நின்ற கரவைக் கரந்து திகழும்
சேறுயர் பூவின்மேய பெருமானும், மற்றைத் திருமாலும் நேட எரியாய்ச்
சீறிய செம்மையாகும் சிவன்மேய செல்வத் திருநாரையூர் கைதொழவே
(10)
மிடைபடும் துன்பம், இன்பம் உளதாக்கும், உள்ளம் வெளியாக்கும், உன்னியுணரும்
படையொரு கையிலேந்திப் பலிகொள்ளும் வண்ணம் ஒலி பாடியாடி, பெருமை
உடையினை விட்டுளோரும், உடல்போர்த்துளோரும் உரைமாயும் வண்ணமழியச்
செடிபட வைத்துகந்த சிவன்மேய செல்வத் திருநாரையூர் கைதொழவே
(11)
எரியொரு வண்ணமாய உருவானை, எந்தை பெருமானை, உள்கி நினையார்
திரிபுரம் அன்றுசெற்ற சிவன்மேய செல்வத் திருநாரையூர் கைதொழுவான்
பொருபுனல் சூழ்ந்த காழி மறைஞான பந்தன் உரைமாலை பத்து மொழிவார்
திருவளர் செம்மையாகி அருள்பேறு மிக்கதுளதென்பர் செம்மையினரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page