திருநாரையூர் – சம்பந்தர் தேவாரம் (2):

<– திருநாரையூர்

(1)
காம்பினை வென்ற மென்தோளி பாகம் கலந்தான், அலந்தாங்கு
தேம்புனல் சூழ்திகழ் மாமடுவில் திருநாரையூர் மேய
பூம்புனல் சேர் புரிபுன் சடையான், புலியின் உரிதோல் மேல்
பாம்பினை வீக்கிய பண்டரங்கன் பாதம் பணிவோமே
(2)
தீவினையாயின தீர்க்க நின்றான், திருநாரையூர் மேயான்
பூவினை மேவு சடைமுடியான், புடைசூழப் பலபூதம்
ஆவினில் ஐந்தும் கொண்டு ஆட்டுகந்தான், அடங்கார் மதில்மூன்றும்
ஏவினை எய்தழித்தான், கழலே பரவா எழுவோமே
(3)
மாயவன் சேயவன் வெள்ளியவன், விடஞ்சேரு மைமிடற்றன்
ஆயவனாகிஒர் அந்தரமும் அவனென்று, வரைஆகம்
தீயவன் நீரவன் பூமியவன், திருநாரையூர் தன்னில்
மேயவனைத் தொழுவார்அவர் மேல் வினையாயின வீடுமே
(4)
துஞ்சிருளாடுவர், தூமுறுவல் துளங்கும் உடம்பினராய்
அஞ்சுடரார் எரியாடுவர், ஆர்அழலார் விழிக்கண்
நஞ்சுமிழ் நாகம் அரைக்கசைப்பர், நலனோங்கு நாரையூர்
எஞ்சிவனார்க்கு அடிமைப்படுவார்க்கு இனியில்லை ஏதமே
(5)
பொங்கிளம் கொன்றையினார், கடலில் விடமுண்டு இமையோர்கள்
தங்களை ஆரிடர் தீர நின்ற தலைவர், சடைமேலோர்
திங்களை வைத்து அனலாடலினார், திருநாரையூர் மேய
வெங்கனல் வெண்ணீறணிய வல்லார் அவரே விழுமியரே
(6)
பாருறுவாய் மையினார் பரவும் பரமேட்டி, பைங்கொன்றைத்
தாருறு மார்புடையான், மலையின் தலைவன், மலைமகளைச்
சீருறும், மாமறுகில் சிறைவண்டறையும் திருநாரை
ஊருறைஎம் இறைவர்க்கிவை ஒன்றொடொன்று ஒவ்வாவே
(7)
கள்ளி இடுதலை ஏந்து கையர், கரிகாடர், கண்ணுதலர்
வெள்ளிய கோவண ஆடை தன்மேல் மிளிர் ஆடரவார்த்து
நள்ளிருள் நட்டமதாடுவர், நன்னலன் ஓங்கு நாரையூர்
உள்ளிய போழ்தில் எம்மேல்வரு வல்வினையாயின ஓடுமே
(8)
நாமமெனைப் பலவும் உடையான், நலனோங்கு நாரையூர்
தாமொம் எனப் பறையாழ் குழல் தாளார் கழல்பயில
ஈம விளக்கெரி சூழ்சுடலை இயம்பும் இடுகாட்டில்
சாமமுரைக்க நின்றாடுவானும் தழலாய சங்கரனே
(9)
ஊனுடை வெண்தலை கொண்டுழல்வான், ஒளிர்புன் சடைமேலோர்
வானிடை வெண்மதி வைத்துகந்தான், வரிவண்டு யாழ்முரலத்
தேனுடை மாமலர் அன்னம்வைகும் திருநாரையூர் மேய
ஆனிடை ஐந்துகந்தான் அடியே பரவா அடைவோமே
(10)
தூசுபுனை துவராடை மேவும் தொழிலார், உடம்பினிலுள்
மாசு புனைந்து உடை நீத்தவர்கள் மயல்நீர்மை கேளாதே
தேசுடையீர்கள் தெளிந்தடைமின் திருநாரையூர் தன்னில்
பூசுபொடித் தலைவர் அடியார் அடியே பொருத்தமே
(11)
தண்மதி தாழ்பொழில் சூழ் புகலித் தமிழ்ஞான சம்பந்தன்
ஒண்மதி சேர் சடையான் உறையும் திருநாரையூர் தன்மேல்
பண்மதியால் சொன்ன பாடல் பத்தும் பயின்றார் வினைபோகி
மண்மதியாது போய் வான்புகுவர் வானோர் எதிர்கொளவே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page