திருநாரையூர் – சம்பந்தர் தேவாரம் (3):

<– திருநாரையூர்

(1)
கடலிடை வெங்கடு நஞ்சமுண்ட கடவுள், விடையேறி
உடலிடையில் பொடிப் பூசவல்லான், உமையோடு ஒருபாகன்
அடலிடையில் சிலை தாங்கிஎய்த அம்மான், அடியார்மேல்
நடலை வினைத்தொகை தீர்த்துகந்தான் இடம் நாரையூர் தானே
(2)
விண்ணின் மின்னேர் மதி, துத்திநாகம், விரிபூமலர்க் கொன்றை
பெண்ணின் முன்னே மிக வைத்துகந்த பெருமான், எரியாடி
நண்ணிய தன்அடியார்களோடும் திருநாரையூரான் என்று
எண்ணுமின், நும்வினை போகும் வண்ணம் இறைஞ்சும் நிறைவாமே
(3)
தோடொரு காது, ஒருகாது சேர்ந்த குழையான், இழை தோன்றும்
பீடொரு கால் பிரியாது நின்ற பிறையான், மறையோதி
நாடொரு காலமும் சேர நின்ற திருநாரையூரானைப்
பாடுமினீர் பழி போகும் வண்ணம், பயிலும் உயர்வாமே
(4)
வெண்ணிலவம் சடைசேர வைத்து, விளங்கும் தலையேந்திப்
பெண்ணில் அமர்ந்தொரு கூறதாய பெருமான், அருளார்ந்த
அண்ணல் மன்னியுறை கோயிலாகு மணிநாரையூர் தன்னை
நண்ணல் அமர்ந்து உறவாக்குமின்கள் நடலை கரிசறுமே
(5)
வானமர் தீவளி நீர்நிலனாய் வழங்கும் பழியாகும்
ஊனமர் இன்னுயிர் தீங்குகுற்ற முறைவால் பிறிதின்றி
நானமரும் பொருளாகி நின்றான் திருநாரையூர் எந்தை
கோனவனைக் குறுகக் குறுகா கொடுவல் வினைதானே
(6)
கொக்கிறகும் குளிர் சென்னி மத்தம் குலாய மலர்சூடி
அக்கரவோடரை ஆர்த்துகந்த அழகன், குழகாக
நக்கமரும் திருமேனியாளன், திருநாரையூர் மேவிப்
புக்கமரும் மனத்தோர்கள் தம்மைப் புணரும் புகல்தானே
(7)
ஊழியும் இன்பமும் காலமாகி, உயரும் தவமாகி
ஏழிசையின் பொருள் வாழும் வாழ்க்கை வினையின் புணர்ப்பாகி
நாழிகையும் பல ஞாயிறாகி, நளிர் நாரையூர் தன்னில்
வாழியர் மேதகு மைந்தர் செய்யும் வகையின் விளைவாமே
(8)
கூசமிலாத அரக்கன் வரையைக் குலுங்க எடுத்தான் தோள்
நாசமதாகி இறஅடர்த்த விரலான், கரவாதார்
பேச வியப்பொடு பேணநின்ற பெரியோன் இடம் போலும்
தேசமுறப் புகழ் செம்மை பெற்ற திருநாரையூர் தானே
(9)
பூமகனும், அவனைப் பயந்த புயலார் நிறத்தானும்
ஆமளவும் திரிந்தேத்திக் காண்டலறிதற்கு அரியான்ஊர்
பாமருவும் குணத்தோர்கள் ஈண்டிப் பலவும் பணிசெய்யும்
தேமருவும் திகழ் சோலை சூழ்ந்த திருநாரையூர் தானே
(10)
வெற்றரையாகிய வேடம்காட்டித் திரிவார், துவராடை
உற்றரையோர்கள் உரைக்கும் சொல்லை உணராது எழுமின்கள்
குற்றமிலாததோர் கொள்கை எம்மான் குழகன் தொழிலாரப்
பெற்று அரவாட்டிவரும் பெருமான் திருநாரையூர் சேர்வே
(11)
பாடியலும் திரைசூழ் புகலித் திருஞான சம்பந்தன்
சேடியலும் புகழோங்கு செம்மைத் திருநாரையூரான் மேல்
பாடிய தண்தமிழ் மாலை பத்தும் பரவித் திரிந்தாக
வாடிய சிந்தையினார்க்கு நீங்கும் அவலக் கடல்தானே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page