திருநாரையூர் – அப்பர் தேவாரம் (2):

<– திருநாரையூர்

(1)
சொல்லானைப் பொருளானைச் சுருதியானைச்
    சுடராழி நெடுமாலுக்கருள் செய்தானை
அல்லானைப் பகலானை, அரியான் தன்னை
    அடியார்கட்கு எளியானை, அரண் மூன்றெய்த
வில்லானைச், சரம் விசயற்கருள் செய்தானை
    வெங்கதிரோன் மாமுனிவர் விரும்பியேத்தும்
நல்லானைத், தீயாடு நம்பன் தன்னை
    நாரையூர் நன்னகரில் கண்டேன் நானே
(2)
பஞ்சுண்ட மெல்லடியாள் பங்கன் தன்னைப்
    பாரொடுநீர் சுடர்படர் காற்றாயினானை
மஞ்சுண்ட வானாகி வானம் தன்னில்
    மதியாகி மதிசடைமேல் வைத்தான் தன்னை
நெஞ்சுண்டென் நினைவாகி நின்றான் தன்னை
    நெடுங்கடலைக் கடைந்தவர் போய் நீங்க ஓங்கும்
நஞ்சுண்டு தேவர்களுக்கு அமுதீந்தானை
    நாரையூர் நன்னகரில் கண்டேன் நானே
(3)
மூவாதி யாவர்க்கும் மூத்தான் தன்னை
    முடியாதே முதல்நடுவும் முடிவானானைத்
தேவாதி தேவர்கட்கும் தேவன் தன்னைத்
    திசைமுகன் தன் சிரமொன்று சிதைத்தான் தன்னை
ஆவாத அடலேறொன்று உடையான் தன்னை
    அடியேற்கு நினைதோறும் அண்ணிக்கின்ற
நாவானை, நாவினில் நல்லுரை ஆனானை
    நாரையூர் நன்னகரில் கண்டேன் நானே
(4)
செம்பொன்னை நன்பவளம் திகழும் முத்தைச்
    செழுமணியைத் தொழுமவர் தம் சித்தத்தானை
வம்பவிழும் மலர்க்கணை வேள் உலக்க நோக்கி
    மகிழ்ந்தானை, மதிற்கச்சி மன்னுகின்ற
கம்பனை, எம்கயிலாய மலையான் தன்னைக்
    கழுகினொடு காகுத்தன் கருதியேத்தும்
நம்பனை, எம்பெருமானை, நாதன் தன்னை
    நாரையூர் நன்னகரில் கண்டேன் நானே
(5)
புரையுடைய கரியுரிவைப் போர்வையானைப்
    புரிசடைமேல் புனலடைத்த புனிதன் தன்னை
விரையுடைய வெள்ளெருக்கங் கண்ணியானை
    வெண்ணீறு செம்மேனி விரவினானை
வரையுடைய மகள் தவஞ்செய் மணாளன் தன்னை
    வருபிணிநோய் பிரிவிக்கும் மருந்து தன்னை
நரைவிடைநல் கொடியுடைய நாதன் தன்னை
    நாரையூர் நன்னகரில் கண்டேன் நானே
(6)
பிறவாதும் இறவாதும் பெருகினானைப்
    பேய்பாட நடமாடும் பித்தன் தன்னை
மறவாத மனத்தகத்து மன்னினானை
    மலையானைக் கடலானை வனத்துளானை
உறவானைப் பகையானை உயிரானானை
    உள்ளானைப் புறத்தானை ஓசையானை
நறவாரும் பூங்கொன்றை சூடினானை
    நாரையூர் நன்னகரில் கண்டேன் நானே
(7)
தக்கனது வேள்விகெடச் சாடினானைத்
    தலைகலனாப் பலியேற்ற தலைவன் தன்னைக்
கொக்கரை சச்சரி வீணைப் பாணியானைக்
    கோணாகம் பூணாகக் கொண்டான் தன்னை
அக்கினொடும் என்பணிந்த அழகன் தன்னை
    அறுமுகனோடு ஆனைமுகற்கு அப்பன் தன்னை
நக்கனை அக்கரையானை நள்ளாற்றானை
    நாரையூர் நன்னகரில் கண்டேன் நானே
(8)
அரிபிரமர் தொழுதேத்தும் அத்தன் தன்னை
    அந்தகனுக்கு அந்தகனை, அளக்கலாகா
எரிபுரியும் இலிங்க புராணத்துளானை
    எண்ணாகிப் பண்ணார் எழுத்தானானைத்
திரிபுரம் செற்றொரு மூவர்க்கு அருள் செய்தானைச்
    சிலந்திக்கும் அரசளித்த செல்வன் தன்னை
நரிவிரவு காட்டகத்தில் ஆடலானை
    நாரையூர் நன்னகரில் கண்டேன் நானே
(9)
ஆலாலம் மிடற்றணியா அடக்கினானை
    ஆலதன்கீழ் அறம் நால்வர்க்கருள் செய்தானைப்
பாலாகித் தேனாகிப் பழமுமாகிப்
    பைங்கரும்பாய் அங்கருந்தும் சுவையானானை
மேலாய வேதியர்க்கு வேள்வியாகி
    வேள்வியினின் பயனாய விமலன் தன்னை
நாலாய மறைக்கிறைவன் ஆயினானை
    நாரையூர் நன்னகரில் கண்டேன் நானே
(10)
மீளாத ஆளென்னை உடையான் தன்னை
    வெளிசெய்த வழிபாடு மேவினானை
மாளாமை மறையவனுக்குயிரும் வைத்து
    வன்கூற்றின் உயிர்மாள உதைத்தான் தன்னைத்
தோளாண்மை கருதி வரையெடுத்த தூர்த்தன்
    தோள்வலியும் தாள்வலியும் தொலைவித்தாங்கே
நாளோடு வாள்கொடுத்த நம்பன் தன்னை
    நாரையூர் நன்னகரில் கண்டேன் நானே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page