(1)
வீறு தானுடை வெற்பன்; மடந்தையோர்
கூறனாகிலும், கூன்பிறை சூடிலும்
நாறு பூம்பொழில் நாரையூர் நம்பனுக்கு
ஆறு சூடலும் அம்ம அழகிதே
(2)
புள்ளி கொண்ட புலியுரி ஆடையும்
வெள்ளி கொண்ட வெண்பூதி மெய்யாடலும்
நள்ளி தெண்திரை நாரையூரான் நஞ்சை
அள்ளி உண்டலும் அம்ம அழகிதே
(3)
வேடு தங்கிய வேடமும், வெண்தலை
ஓடு தங்கிய உண்பலி கொள்கையும்
நாடு தங்கிய நாரையூரான் நடம்
ஆடு பைங்கழல் அம்ம அழகிதே
(4)
கொக்கின் தூவலும், கூவிளங்கண்ணியும்
மிக்க வெண்தலை மாலை விரிசடை
நக்கனாகிலும் நாரையூர் நம்பனுக்கு
அக்கின் ஆரமும் அம்ம அழகிதே
(5)
வடிகொள் வெண்மழு, மானமர் கைகளும்
பொடிகொள் செம்பவளம் புரை மேனியும்
நடிகொள் நன்மயில் சேர் திருநாரையூர்
அடிகள் தம்அடி அம்ம அழகிதே
(6)
சூலம் மல்கிய கையும், சுடரொடு
பாலும் நெய்தயிராடிய பான்மையும்
ஞாலம் மல்கிய நாரையூர் நம்பனுக்கு
ஆல நீழலும் அம்ம அழகிதே
(7)
பண்ணினால் மறை பாடலோடு ஆடலும்
எண்ணிலார் புரமூன்றெரி செய்ததும்
நண்ணினார் துயர் தீர்த்தலும் நாரையூர்
அண்ணலார் செய்கை அம்ம அழகிதே
(8)
என்பு பூண்டு எருதேறி, இளம்பிறை
மின் புரிந்த சடைமேல் விளங்கவே
நன்பகல் பலி தேரினும் நாரையூர்
அன்பனுக்கது அம்ம அழகிதே
(9)
முரலும் கின்னர மொந்தை முழங்கவே
இரவில் நின்றெரி ஆடலும், நீடுலாம்
நரலும் வாரிநல் நாரையூர் நம்பனுக்கு
அரவும் பூணுதல் அம்ம அழகிதே
(10)
கடுக்கையம் சடையன், கயிலைம் மலை
எடுத்த வாளரக்கன் தலை ஈரைஞ்சும்
நடுக்கம் வந்திற நாரையூரான் விரல்
அடுத்த தன்மையும் அம்ம அழகிதே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...