திருநாட்டியத்தான்குடி

<– சோழ நாடு (காவிரி தென்கரை)

(குறிப்பு: சுந்தரரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(சுந்தரர் தேவாரம்):

(1)
பூணாண் ஆவதொர் அரவம் கண்டஞ்சேன்
    புறங்காட்டாடல் கண்டு இகழேன்
பேணாயாகிலும் பெருமையை உணர்வேன்
    பிறவேனாகிலும் மறவேன்
காணாயாகிலும் காண்பன் என் மனத்தால்
    கருதாயாகிலும் கருதி
நானேல் உன்னடி பாடுதல் ஒழியேன்
    நாட்டியத்தான்குடி நம்பீ
(2)
கச்சேர் பாம்பொன்று கட்டிநின்று, இடுகாட்டு
    எல்லியில் ஆடலைக் கவர்வன்
துச்சேன் என்மனம் புகுந்திருக்கின்றமை
    சொல்லாய் திப்பிய மூர்த்தீ
வைச்சே இடர்களைக் களைந்திட வல்ல
    மணியே மாணிக்கவண்ணா
நச்சேன் ஒருவரை நான்உனை அல்லால்
    நாட்டியத்தான்குடி நம்பீ
(3)
அஞ்சாதே உனக்காட் செய வல்லேன்
    யாதினுக்கு ஆசைப்படுகேன்
பஞ்சேர் மெல்லடி மாமலை மங்கை
    பங்கா, எம் பரமேட்டீ
மஞ்சேர் வெண்மதி செஞ்சடை வைத்த
    மணியே, மாணிக்க வண்ணா
நஞ்சேர் கண்டா, வெண்தலை ஏந்தீ
    நாட்டியத் தான்குடி நம்பீ
(4)
கல்லேன் அல்லேன் நின்புகழ், அடிமை
    கல்லாதே பல கற்றேன்
நில்லேன் அல்லேன் நின்வழி நின்றார்
    தம்முடை நீதியை நினைய
வல்லேன் அல்லேன் பொன்னடி பரவ
    மாட்டேன் மறுமையை நினைய
நல்லேன் அல்லேன் நானுனக்கல்லால்
    நாட்டியத்தான்குடி நம்பீ
(5)
மட்டார் பூங்குழல் மலைமகள் கணவனைக்
    கருதாதார் தமைக் கருதேன்
ஒட்டாயாகிலும் ஒட்டுவன் அடியேன்
    உன்அடி அடைந்தவர்க்கடிமைப்
பட்டேனாகிலும் பாடுதல் ஒழியேன்
    பாடியும் நாடியும் அறிய
நட்டேன், ஆதலால் நான் மறக்கில்லேன்
    நாட்டியத்தான்குடி நம்பீ
(6)
படப்பாற் தன்மையில் நான் பட்டதெல்லாம்
    படுத்தாய் என்றல்லல் பறையேன்
குடப்பாச் சில்லுறை கோக்குளிர்வானே
    கோனே கூற்றுதைத்தானே
மடப்பால் தயிரொடு நெய் மகிழ்ந்தாடு
    மறையோதீ, மங்கை பங்கா
நடப்பாயாகிலும் நடப்பன் உன்அடிக்கே
    நாட்டியத்தான்குடி நம்பீ
(7)
ஐவாய் அரவினை மதியுடன் வைத்த
    அழகா, அமரர்கள் தலைவா
எய்வான் வைத்ததொர் இலக்கினை அணைதர
    நினைந்தேன் உள்ளம் உள்ளளவும்
உய்வான் எண்ணி வந்து உன்னடி அடைந்தேன்
    உகவாயாகிலும் உகப்பன்
நைவான் அன்றுனக்கு ஆட்பட்டதடியேன்
    நாட்டியத்தான்குடி நம்பீ
(8)
கலியேன் மானுட வாழ்க்கை ஒன்றாகக்
    கருதிடில் கண்கள்நீர் மல்கும்
பலி தேர்ந்துண்பதொர் பண்பு கண்டிகழேன்
    பசுவே ஏறினும் பழியேன்
வலியேஆகிலும் வணங்குதல் ஒழியேன்
    மாட்டேன் மறுமையை நினைய
நலியேன் ஒருவரை நான்உனை அல்லால்
    நாட்டியத்தான்குடி நம்பீ
(9)
குண்டாடிச் சமண் சாக்கியப் பேய்கள்
    கொண்டார் ஆகிலும், கொள்ளக்
கண்டாலும் கருதேன், எருதேறும்
    கண்ணா நின்னலது அறியேன்
தொண்டாடித் தொழுவார் தொழக் கண்டு
    தொழுதேன் என்வினை போக
நண்டாடும் வயல் தண்டலை வேலி
    நாட்டியத்தான்குடி நம்பீ
(10)
கூடா மன்னரைக் கூட்டத்து வென்ற
    கொடிறன் கோட்புலி சென்னி
நாடார் தொல்புகழ் நாட்டியத்தான்குடி
    நம்பியை நாளும் மறவாச்
சேடார் பூங்குழல் சிங்கடி யப்பன்
    திருவாரூரன் உரைத்த
பாடீராகிலும் பாடுமின், தொண்டீர்
    பாடநும் பாவம் பற்றறுமே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page