திருநாகேச்சுரம் – சுந்தரர் தேவாரம்:

<– திருநாகேச்சுரம்

 

(1)
பிறையணி வாள்நுதலாள் உமையாள்அவள் பேழ்கணிக்க
நிறையணி நெஞ்சனுங்க நீல மால்விடம் உண்டதென்னே
குறையணி குல்லை முல்லை அளைந்து குளிர் மாதவிமேல்
சிறையணி வண்டுகள் சேர் திருநாகேச்சரத்தானே
(2)
அருந்தவ மாமுனிவர்க்கு அருளாகியொர் ஆலதன்கீழ்
இருந்தறமே புரிதற்கு இயல்பாகியதென்னை கொலாம்
குருந்தயலே குரவம் அரவின் எயிறேற்றரும்பச்
செருந்தி செம்பொன் மலரும் திருநாகேச்சரத்தானே
(3)
பாலனதாருயிர்மேல் பரியாது பகைத்தெழுந்த
காலனை வீடுவித்துக் கருத்தாக்கியதென்னை கொலாம்
கோல மலர்க்குவளைக் கழுநீர்வயல் சூழ்கிடங்கில்
சேலொடு வாளைகள் பாய் திருநாகேச்சரத்தானே
(4)
குன்ற மலைக்குமரி கொடியேர் இடையாள் வெருவ
வென்றி மதகரியின் உரி போர்த்ததும் என்னை கொலாம்
முன்றில் இளங்கமுகின் முதுபாளை மதுஅளைந்து
தென்றல் புகுந்துலவும் திருநாகேச்சரத்தானே
(5)
அரைவிரி கோவணத்தோடு அரவார்த்தொரு நான்மறைநூல்
உரைபெருக உரைத்தன்று உகந்தருள் செய்ததென்னே
வரைதரு மாமணியும் வரைச் சந்தகிலோடும் உந்தித்
திரைபொரு தண்பழனத் திருநாகேச்சரத்தானே
(6)
தங்கிய மாதவத்தின் தழல் வேள்வியினின்று எழுந்த
சிங்கமும் நீள்புலியும், செழுமால் கரியோடலறப்
பொங்கிய போர்புரிந்து பிளந்தீருரி போர்த்ததென்னே
செங்கயல் பாய்கழனித் திருநாகேச்சரத்தானே
(7)
நின்றஇம் மாதவத்தை ஒழிப்பான் சென்றணைந்துமிகப்
பொங்கிய பூங்கணைவேள் பொடியாக விழித்தலென்னே
பங்கய மாமலர்மேல் மதுவுண்டு வண் தேன்முரலச்
செங்கயல் பாய்வயல்சூழ் திருநாகேச்சரத்தானே
(8)
வரிஅர நாணதாக, மாமேரு வில்லதாக
அரியன முப்புரங்கள்அவை ஆரழல் ஊட்டல் என்னே
விரிதரு மல்லிகையும் மலர்ச் சண்பகமும் அளைந்து
திரிதரு வண்டு பண்செய் திருநாகேச்சரத்தானே
(9)
அங்கியல் யோகுதனை அழிப்பான் சென்றணைந்து மிகப்
பொங்கிய பூங்கணைவேள் பொடியாக விழித்தல் என்னே
பங்கய மாமலர்மேல் மதுவுண்டு பண்வண்டறையச்
செங்கயல் நின்றுகளும் திருநாகேச்சரத்தானே
(10)
குண்டரைக் கூறையின்றித் திரியும் சமண் சாக்கியப்பேய்
மிண்டரைக் கண்ட தன்மை விரவாக்கியதென்னை கொலோ
தொண்டிரைத்து வணங்கித் தொழில் பூண்டடடியார் பரவும்
தெண்திரைத் தண்வயல்சூழ் திருநாகேச்சரத்தானே
(11)
கொங்கணை வண்டரற்றக் குயிலும் மயிலும் பயிலும்
தெங்கமழ் பூம்பொழில்சூழ் திருநாகேச்சரத்தானை
வங்க மலிகடல்சூழ் வயல் நாவலவூரன் சொன்ன
பங்கமில் பாடல் வல்லார் அவர்தம் வினை பற்றறுமே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page