(1)
தழைகொள் சந்தும் அகிலும் மயிற்பீலியும் சாதியின்
பழமும் உந்திப் புனல்பாய் பழங்காவிரித் தென்கரை
நழுவில் வானோர் தொழநல்கு சீர்மல்கு நாகேச்சரத்து
அழகர் பாதம் தொழுதேத்த வல்லார்க்கு அழகாகுமே
(2)
பெண்ணொர் பாகம் அடையச், சடையில் புனல்பேணிய
வண்ணமான பெருமான் மருவும் இடம், மண்ணுளார்
நண்ணி நாளும் தொழுதேத்தி நன்கெய்து நாகேச்சரம்
கண்ணினால் காண வல்லார் அவர்கண் உடையார்களே
(3)
குறவர் கொல்லைப் புனங்கொள்ளை கொண்டும் மணிகுலவுநீர்
பறவையாலப் பரக்கும் பழங்காவிரித் தென்கரை
நறவநாறும் பொழில் சூழ்ந்தழகாய நாகேச்சரத்து
இறைவர்பாதம் தொழுதேத்த வல்லார்க்கிடரில்லையே
(4)
கூசநோக்காது முன்சொன்ன பொய்கொடு வினைகுற்றமும்
நாசமாக்கும் மனத்தார்கள் வந்தாடு நாகேச்சரம்
தேசமாக்கும் திருக்கோயிலாக் கொண்ட செல்வன்கழல்
நேசமாக்கும் திறத்தார் அறத்தார் நெறிப்பாலரே
(5)
வம்புநாறும் மலரும், மலைப் பண்டமும் கொண்டுநீர்
பைம்பொன் வாரிக் கொழிக்கும் பழங்காவிரித் தென்கரை
நம்பன் நாளும் அமர்கின்ற நாகேச்சர நண்ணுவார்
உம்பர் வானோர் தொழச் சென்றுடனாவதும் உண்மையே
(6)
காளமேகந் நிறக் காலனோடு, அந்தகன் கருடனும்
நீளமாய் நின்றெய்த காமனும் பட்டன நினைவுறின்
நாளும் நாதன் அமர்கின்ற நாகேச்சர நண்ணுவார்
கோளுநாளும் தீயவேனும் நன்காம் குறிக்கொள்மினே
(7)
வேயுதிர் முத்தொடு மத்தயானை மருப்பும், விராய்ப்
பாய்புனல் வந்தலைக்கும் பழங்காவிரித் தென்கரை
நாயிறும் திங்களும்கூடி வந்தாடு நாகேச்சரம்
மேயவன்தன் அடிபோற்றி என்பார் வினைவீடுமே
(8)
இலங்கை வேந்தன் சிரம்பத்திரட்டி எழில் தோள்களும்
மலங்கிவீழம் மலையால் அடர்த்தான் இடமல்கிய
நலங்கொள் சிந்தையவர் நாள்தொறும் நண்ணும் நாகேச்சரம்
வலங்கொள் சிந்தை உடையார் இடராயின மாயுமே
(9)
கரியமாலும் அயனும் அடியும்முடி காண்பொணா
எரியதாகி நிமிர்ந்தான் அமரும்இடம், ஈண்டு!கா
விரியின் நீர் வந்தலைக்கும் கரைமேவு நாகேச்சரம்
பிரிவிலாத அடியார்கள் வானில் பிரியார்களே
(10)
தட்டிடுக்கி உறிதூக்கிய கையினர், சாக்கியர்
கட்டுரைக்கும் மொழிகொள்ளலும் வெள்ளிலங் காட்டிடை
நட்டிருள்கண் நடமாடிய நாதன் நாகேச்சுரம்
மட்டிருக்கும் மலரிட்டு அடிவீழ்வது வாய்மையே
(11)
கந்தநாறும் புனல்காவிரித் தென்கரைக் கண்ணுதல்
நந்திசேரும் திருநாகேச்சரத்தின் மேல் !ஞானசம்
பந்தன் நாவில் பனுவல் இவைபத்தும் வல்லார்கள் போய்
எந்தைஈசன் இருக்கும் உலகெய்த வல்லார்களே