(1)
பொன்நேர் தரு மேனியனே, புரியும்
மின்நேர் சடையாய், விரை காவிரியின்
நன்னீர் வயல் நாகேச்சுர நகரின்
மன்னே என வல்வினை மாய்ந்தறுமே
(2)
சிறவார் புரமூன்றெரியச் சிலையில்
உறவார் கணை உய்த்தவனே, உயரும்
நறவார் பொழில் நாகேச்சுர நகருள்
அறவா என வல்வினை ஆசறுமே
(3)
கல்லால் நிழல் மேயவனே, கரும்பின்
வில்லான் எழில்வேவ விழித்தவனே
நல்லார் தொழு நாகேச்சுர நகரில்
செல்வா என வல்வினை தேய்ந்தறுமே
(4)
நகுவான் மதியோடு அரவும் புனலும்
தகுவார் சடையின் முடியாய், தளவம்
நகுவார் பொழில் நாகேச்சுர நகருள்
பகவா என வல்வினை பற்றறுமே
(5)
கலைமான் மறியும் கனலும் மழுவும்
நிலையாகிய கையினனே, நிகழும்
நலமாகிய நாகேச்சுர நகருள்
தலைவா என வல்வினை தானறுமே
(6)
குரையார் கழலாட நடம் குலவி
வரையான் மகள் காண மகிழ்ந்தவனே
நரையார் விடையேறு நாகேச்சுரத்தெம்
அரசே என நீங்கும் அருந்துயரே
(7)
முடையார் தரு வெண்தலை கொண்டுலகில்
கடையார் பலி கொண்டுழல் காரணனே
நடையார் தரு நாகேச்சுர நகருள்
சடையா என வல்வினை தானறுமே
(8)
ஓயாத அரக்கன் நொடிந்தலற
நீயார் அருள்செய்து நிகழ்ந்தவனே
வாயார அழுத்துவர் நாகேச்சுரத்
தாயே என வல்வினை தானறுமே
(9)
நெடியானொடு நான்முகன் நேடலுறச்
சுடுமால் எரியாய் நிமிர் சோதியனே
நடுமா வயல் நாகேச்சுர நகரே
இடமா உறைவாய் என இன்புறுமே
(10)
மலம் பாவிய கையொடு மண்டையதுண்
கலம் பாவியர் கட்டுரை விட்டுலகில்
நலம் பாவிய நாகேச்சுர நகருள்
சிலம்பா எனத் தீவினை தேய்ந்தறுமே
(11)
கலமார் கடல் சூழ்தரு காழியர்கோன்
தலமார் தரு செந்தமிழின் விரகன்
நலமார் தரு நாகேச்சுரத்தரனைச்
சொல் மாலைகள் சொல்ல நிலாவினையே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...