திருநாகேச்சுரம் – அப்பர் தேவாரம் (1):

<– திருநாகேச்சுரம்

 

(1)
நல்லர், நல்லதோர் நாகம் கொண்டாட்டுவர்
வல்லர் வல்வினை தீர்க்கும் மருந்துகள்
பல்லில் ஓடுகை ஏந்திப் பலிதிரி
செல்வர் போல் திருநாகேச்சரவரே
(2)
நாவலம் பெருந்தீவினில் வாழ்பவர்
மேவி வந்து வணங்கி வினையொடு
பாவமாயின பற்றறுவித்திடும்
தேவர் போல் திருநாகேச்சரவரே
(3)
ஓதமார் கடலின் விடமுண்டவர்
ஆதியார் அயனோடு அமரர்க்கெலாம்
மாதொர் கூறர், மழு வலனேந்திய
நாதர் போல் திருநாகேச்சரவரே
(4)
சந்திரன்னொடு சூரியர் தாமுடன்
வந்து சீர் வழிபாடுகள் செய்தபின்
ஐந்தலை அரவின்பணி கொண்டருள்
மைந்தர் போல்மணி நாகேச்சரவரே
(5)
பண்டொர் நாள்இகழ்வான் பழித் தக்கனார்
கொண்ட வேள்விக் குமண்டையது கெடத்
தண்டமா விதாதாவின் தலைகொண்ட
செண்டர் போல் திருநாகேச்சரவரே
(6)
வம்பு பூங்குழல் மாது மறுகவோர்
கம்ப யானை உரித்த கரத்தினர்
செம்பொனார் இதழிம் மலர்ச் செஞ்சடை
நம்பர் போல் திருநாகேச்சரவரே
(7)
மானை ஏந்திய கையினர், மையறு
ஞானச் சோதியர், ஆதியர், நாமம்தான்
ஆன அஞ்செழுத்தோத வந்து அண்ணிக்கும்
தேனர் போல் திருநாகேச்சரவரே
(8)
கழல்கொள் காலினர், காலனைக் காய்ந்தவர்
தழல்கொள் மேனியர், சாந்த வெண்ணீறணி
அழகர், ஆல்நிழல் கீழ்அறமோதிய
குழகர் போல் குளிர் நாகேச்சரவரே
(9)
வட்ட மாமதில் மூன்றுடன் வல்லரண்
சுட்ட செய்கையர் ஆகிலும், சூழ்ந்தவர்
குட்ட வல்வினை தீர்த்துக் குளிர்விக்கும்
சிட்டர் போல் திருநாகேச்சரவரே
(10)
தூர்த்தன் தோள்முடி தாளும் தொலையவே
சேர்த்தினார் திருப்பாதத்து ஒருவிரல்
ஆர்த்து வந்துலகத்தவர் ஆடிடும்
தீர்த்தர் போல் திருநாகேச்சரவரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page