(1)
கச்சைசேர் அரவர் போலும், கறையணி மிடறர் போலும்
பிச்சை கொண்டுண்பர் போலும், பேரருளாளர் போலும்
இச்சையால் மலர்கள் தூவி இரவொடு பகலும் தம்மை
நச்சுவார்க்கினியர் போலும் நாகஈச்சரவனாரே
(2)
வேடுறு வேடராகி விசயனோடு எய்தார் போலும்
காடுறு பதியர் போலும், கடிபுனல் கங்கை நங்கை
சேடெறி சடையர் போலும், தீவினை தீர்க்கவல்ல
நாடறி புகழர் போலும் நாகஈச்சரவனாரே
(3)
கற்றுணை வில்லதாகக் கடியரண் செற்றார் போலும்
பொற்றுணைப் பாதர் போலும், புலியதள் உடையர் போலும்
சொற்றுணை மாலை கொண்டு தொழுதெழுவார்கட்கெல்லாம்
நற்றுணையாவர் போலும் நாகஈச்சரவனாரே
(4)
கொம்பனாள் பாகர் போலும், கொடியுடை விடையர் போலும்
செம்பொனார் உருவர் போலும், திகழ்திரு நீற்றர் போலும்
எம்பிரான் எம்மை ஆளும் இறைவனே என்று தம்மை
நம்புவார்க்கன்பர் போலும் நாகஈச்சரவனாரே
(5)
கடகரி உரியர் போலும், கனல் மழுவாளர் போலும்
படவர வரையர் போலும், பாரிடம் பலவும் கூடிக்
குடமுடை முழவம் ஆர்ப்பக் கூளிகள் பாட நாளும்
நடநவில் அடிகள் போலும் நாகஈச்சரவனாரே
(6)
பிறையுறு சடையர் போலும், பெண்ணொரு பாகர் போலும்
மறையுறு மொழியர் போலும், நான்மறை அவன் தனோடும்
முறைமுறை அமரர் கூடி முடிகளால் வணங்க நின்ற
நறவமர் கழலர் போலும் நாகஈச்சரவனாரே
(7)
வஞ்சகர்க்கரியர் போலும், மருவினோர்க்கெளியர் போலும்
குஞ்சரத்துரியர் போலும், கூற்றினைக் குமைப்பர் போலும்
விஞ்சையர் இரிய அன்று வேலைவாய் வந்தெழுந்த
நஞ்சணி மிடற்றர் போலும் நாகஈச்சரவனாரே
(8)
போகமார் மோடி கொங்கை புணர்தரு புனிதர் போலும்
வேகமார் விடையர் போலும், வெண் பொடியாடு மேனிப்
பாகமால் உடையர் போலும், பருப்பத வில்லர் போலும்
நாகநாண் உடையர் போலும் நாகஈச்சசரவனாரே
(9)
கொக்கரை தாளம் வீணை பாணிசெய் குழகர் போலும்
அக்கரை அணிவர் போலும், ஐந்தலை அரவர் போலும்
வக்கரை அமர்வர் போலும், மாதரை மையல் செய்யும்
நக்கரை உருவர் போலும் நாகஈச்சரவனாரே
(10)
வின்மையால் புரங்கள் மூன்றும் வெந்தழல் விரித்தார் போலும்
தன்மையால் அமரர் தங்கள் தலைவர்க்கும் தலைவர் போலும்
வன்மையான் மலையெடுத்தான் வலியினைத் தொலைவித்தாங்கே
நன்மையால் அளிப்பர் போலும் நாகஈச்சரவனாரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...