திருநாகேச்சுரம் – அப்பர் தேவாரம் (2):

<– திருநாகேச்சுரம்

 

(1)
தாயவனை, வானோர்க்கும் ஏனோருக்கும்
    தலையவனை, மலையவனை, உலகமெல்லாம்
ஆயவனைச், சேயவனை, அணியான் தன்னை
    அழலவனை நிழலவனை, அறியவொண்ணா
மாயவனை, மறையவனை, மறையோர் தங்கள்
    மந்திரனைத், தந்திரனை, வளரா நின்ற
தீஅவனைத், திருநாகேச்சரத்துளானைச்
    சேராதார் நன்னெறிக்கண் சேராதாரே
(2)
உரித்தானை மதவேழம் தன்னை, மின்னார்
    ஒளிமுடிஎம் பெருமானை, உமையோர் பாகம்
தரித்தானைத், தரியலர்தம் புரமெய்தானைத்
    தன்னடைந்தார் தம்வினைநோய் பாவமெல்லாம்
அரித்தானை, ஆலதன்கீழ் இருந்து நால்வர்க்கு
    அறம்பொருள் வீடின்பம் ஆறங்கம் வேதம்
தெரித்தானைத், திருநாகேச்சரத்துளானைச்
    சேராதார் நன்னெறிக்கண் சேராதாரே
(3)
காரானை உரிபோர்த்த கடவுள் தன்னைக்
    காதலித்து நினையாத கயவர் நெஞ்சில்
வாரானை, மதிப்பவர்தம் மனத்துளானை
    மற்றொருவர் தன்னொப்பார் ஒப்பிலாத
ஏரானை, இமையவர்தம் பெருமான் தன்னை
    இயல்பாகி உலகெலாம் நிறைந்து மிக்க
சீரானைத், திருநாகேச்சரத்துளானைச்
    சேராதார் நன்னெறிக்கண் சேராதாரே
(4)
தலையானை, எவ்வுலகும் தான்ஆனானைத்
    தன்னுருவம் யாவர்க்கும் அறியவொண்ணா
நிலையானை, நேசர்க்கு நேசன் தன்னை
    நீள்வான முகடதனைத் தாங்கி நின்ற
மலையானை, வரியரவு நாணாக் கோத்து
    வல்லசுரர் புரமூன்றும் மடிய எய்த
சிலையானைத், திருநாகேச்சரத்துளானைச்
    சேராதார் நன்னெறிக்கண் சேராதாரே
(5)
மெய்யானைத் தன்பக்கல் விரும்புவார்க்கு
    விரும்பாத வரும்பாவி அவர்கட்கென்றும்
பொய்யானைப், புறங்காட்டில் ஆடலானைப்
    பொன்பொலிந்த சடையானைப், பொடிகொள் பூதிப்
பையானைப், பையரவம் அசைத்தான் தன்னைப்
    பரந்தானைப், பவளமால் வரைபோல் மேனிச்
செய்யானைத், திருநாகேச்சரத்துளானைச்
    சேராதார் நன்னெறிக்கண் சேராதாரே
(6)
துறந்தானை அறம்புரியாத் துரிசர் தம்மைத்
    தோத்திரங்கள் பலசொல்லி வானோரேத்த
நிறைந்தானை, நீர்நிலம்தீ வெளிகாற்றாகி
    நிற்பனவும் நடப்பனவும் ஆயினானை
மறந்தானைத் தன்நினையா வஞ்சர் தம்மை
    அஞ்செழுத்தும் வாய்நவில வல்லோர்க்கென்றும்
சிறந்தானைத், திருநாகேச்சரத்துளானைச்
    சேராதார் நன்னெறிக்கண் சேராதாரே
(7)
மறையானை, மால்விடையொன்று ஊர்தியானை
    மால்கடல் நஞ்சுண்டானை, வானோர் தங்கள்
இறையானை, என் பிறவித்துயர் தீர்ப்பானை
    இன்னமுதை, மன்னியசீர் ஏகம்பத்தில்
உறைவானை, ஒருவரும் ஈங்கறியா வண்ணம்
    என்உள்ளத்துள்ளே ஒளித்து வைத்த
சிறையானைத், திருநாகேச்சரத்துளானைச்
    சேராதார் நன்னெறிக்கண் சேராதாரே
(8)
எய்தானைப் புரமூன்றும் இமைக்கும் போதில்
    இருவிசும்பில் வரும்புனலைத் திருவார் சென்னிப்
பெய்தானைப், பிறப்பிலியை, அறத்தில் நில்லாப்
    பிரமன்தன் சிரமொன்றைக் கரமொன்றினால்
கொய்தானைக், கூத்தாட வல்லான் தன்னைக்
    குறியிலாக் கொடியேனை அடியேனாகச்
செய்தானைத், திருநாகேச்சரத்துளானைச்
    சேராதார் நன்னெறிக்கண் சேராதாரே
(9)
அளியானை, அண்ணிக்கும் ஆன்பால் தன்னை
    வான்பயிரை அப்பயிரின் வாட்டம் தீர்க்கும்
துளியானை, அயன்மாலும் தேடிக் காணாச்
    சுடரானைத், துரிசறத் தொண்டு பட்டார்க்கு
எளியானை, யாவர்க்கும் அரியான் தன்னை
    இன்கரும்பின் தன்னுள்ளால் இருந்த தேறல்
தெளியானைத், திருநாகேச்சரத்துளானைச்
    சேராதார் நன்னெறிக்கண் சேராதாரே
(10)
சீர்த்தானை, உலகேழும் சிறந்து போற்றச்
    சிறந்தானை, நிறைந்தோங்கு செல்வன் தன்னைப்
பார்த்தானை மதனவேள் பொடியாய் வீழப்
    பனிமதியம் சடையானைப், புநிதன் தன்னை
ஆர்த்தோடி மலையெடுத்த அரக்கன் அஞ்ச
    அருவிரலால் அடர்த்தானை, அடைந்தோர் பாவம்
தீர்த்தானைத், திருநாகேச்சரத்துளானைச்
    சேராதார் நன்னெறிக்கண் சேராதாரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page