(1)
செம்பொன் மேனி வெண்ணீறணிவானைக்
கரிய கண்டனை, மாலயன் காணாச்
சம்புவைத், தழல் அங்கையினானைச்
சாம வேதனைத், தன்னொப்பிலானைக்
கும்பமா கரியின் உரியானைக்
கோவின் மேல்வரும் கோவினை, எங்கள்
நம்பனை நள்ளாறனை அமுதை
நாயினேன் மறந்தென் நினைக்கேனே
(2)
விரைசெய் மாமலர்க் கொன்றையினானை
வேத கீதனை, மிகச் சிறந்துருகிப்
பரசுவார் வினைப் பற்றறுப்பானைப்
பாலொடு ஆனஞ்சும் ஆடவல்லானைக்
குரைகடல் வரை ஏழுலகுடைய
கோனை, ஞானக் கொழுந்தினைக், கொல்லை
நரை விடையுடை நள்ளாறனை, அமுதை
நாயினேன் மறந்தென் நினைக்கேனே
(3)
பூவில் வாசத்தைப், பொன்னினை மணியைப்
புவியைக் காற்றினைப், புனல்அனல் வெளியைச்
சேவின் மேல் வரும் செல்வனைச், சிவனைத்
தேவ தேவனைத் தித்திக்கும் தேனைக்
காவியம் கண்ணி பங்கனைக், கங்கைச்
சடையனைக், காமரத்திசை பாட
நாவில் ஊறு நள்ளாறனை, அமுதை
நாயினேன் மறந்தென் நினைக்கேனே
(4)
தஞ்சமென்று தன் தாளதடைந்த
பாலன்மேல் வந்த காலனை உருள
நெஞ்சில் ஓர்உதை கொண்ட பிரானை
நினைப்பவர் மனம் நீங்ககில்லானை
விஞ்சை வானவர் தானவர் கூடிக்
கடைந்த வேலையுள் மிக்கெழுந்தெரியும்
நஞ்சம் உண்ட நள்ளாறனை, அமுதை
நாயினேன் மறந்தென் நினைக்கேனே
(5)
மங்கை பங்கனை, மாசிலா மணியை
வான நாடனை, ஏனமோடு அன்னம்
எங்கும் நாடியும் காண்பரியானை
ஏழையேற்கு எளிவந்தபிரானை
அங்கம் நான்மறையால் நிறைகின்ற
அந்தணாளர் அடியது போற்றும்
நங்கள் கோனை, நள்ளாறனை, அமுதை
நாயினேன் மறந்தென் நினைக்கேனே
(6)
கற்பகத்தினைக், கனகமால் வரையைக்
காம கோபனைக், கண்ணுதலானைச்
சொற்பதப் பொருள் இருள் அறுத்தருளும்
தூய சோதியை, வெண்ணெய் நல்லூரில்
அற்புதப்பழ ஆவணம் காட்டி
அடியனான் என்னை ஆளது கொண்ட
நற்பதத்தை, நள்ளாறனை, அமுதை
நாயினேன் மறந்தென் நினைக்கேனே
(7)
மறவனை, அன்று பன்றிப்பின் சென்ற
மாயனை, நால்வர்க்கு ஆலின்கீழ் உரைத்த
அறவனை, அமரர்க்கரியானை
அமரர் சேனைக்கு நாயகனான
குறவர் மங்கைதன் கேள்வனைப் பெற்ற
கோனை, நான் செய்த குற்றங்கள் பொறுக்கும்
நறை விரியும் நள்ளாறனை, அமுதை
நாயினேன் மறந்தென் நினைக்கேனே
(8)
மாதினுக்கு உடம்பிடம் கொடுத்தானை
மணியினைப், பணிவார் வினை கெடுக்கும்
வேதனை, வேத வேள்வியர் வணங்கும்
விமலனை, அடியேற்கு எளி வந்த
தூதனைத், தன்னைத் தோழமை அருளித்
தொண்டனேன் செய்த துரிசுகள் பொறுக்கும்
நாதனை, நள்ளாறனை அமுதை
நாயினேன் மறந்தென் நினைக்கேனே
(9)
இலங்கை வேந்தன் எழில்திகழ் கயிலை
எடுப்பஆங்கு இமவான் மகள் அஞ்சத்
துலங்கு நீள்முடி ஒருபதும் தோள்கள்
இருபதும் நெரித்து, இன்னிசை கேட்டு
வலங்கை வாளொடு நாமமும் கொடுத்த
வள்ளலைப், பிள்ளை மாமதி சடைமேல்
நலங்கொள் சோதி நள்ளாறனை, அமுதை
நாயினேன் மறந்தென் நினைக்கேனே
(10)
செறிந்த சோலைகள் சூழ்ந்த நள்ளாற்றெம்
சிவனை, நாவலூர்ச் சிங்கடி தந்தை
மறந்து நான் மற்று நினைப்பதே என்று
வனப்பகை அப்பன் ஊரன் வன்தொண்டன்
சிறந்த மாலைகள் அஞ்சினோடஞ்சும்
சிந்தை உள்ளுருகிச் செப்ப வல்லார்க்கு
இறந்து போக்கில்லை வரவில்லையாகி
இன்ப வெள்ளத்துள் இருப்பர்கள் இனிதே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...