திருநள்ளாறு – சம்பந்தர் தேவாரம் (1):

<– திருநள்ளாறு

(1)
போகமார்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம்
பாகமார்த்த பைங்கண் வெள்ளேற்று அண்ணல் பரமேட்டி
ஆகமார்த்த தோலுடையன், கோவண ஆடையின்மேல்
நாகமார்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே
(2)
தோடுடைய காதுடையன்; தோலுடையன்; தொலையாப்
பீடுடைய போர் விடையன்; பெண்ணும்ஓர் பாலுடையன்
ஏடுடைய மேலுலகோடு ஏழ்கடலும் சூழ்ந்த
நாடுடைய நம்பெருமான் மேயது நள்ளாறே
(3)
ஆன்முறையால் ஆற்ற வெண்ணீறாடி, அணியிழையோர்
பால் முறையால் வைத்த பாதம் பத்தர் பணிந்தேத்த
மான்மறியும் வெண்மழுவும் சூலமும் பற்றியகை
நான்மறையான் நம்பெருமான் மேயது நள்ளாறே
(4)
புல்கவல்ல வார்சடைமேல் பூம்புனல் பெய்து, அயலே
மல்கவல்ல கொன்றைமாலை மதியோடு உடன்சூடிப்
பல்கவல்ல தொண்டர்தம் பொற்பாத நிழல்சேர
நல்கவல்ல நம்பெருமான் மேயது நள்ளாறே
(5)
ஏறுதாங்கி ஊர்தி பேணி, ஏர்கொள் இளமதியம்
ஆறுதாங்கும் சென்னிமேல் ஓர் ஆடரவம்சூடி
நீறுதாங்கி, நூல்கிடந்த மார்பில் நிரைகொன்றை
நாறுதாங்கு நம்பெருமான் மேயது நள்ளாறே
(6)
திங்கள் உச்சிமேல் விளங்கும் தேவன், இமையோர்கள்
எங்கள்உச்சி எம்இறைவன் என்றடியே இறைஞ்சத்
தங்கள் உச்சியால் வணங்கும் தன் அடியார்கட்கெல்லாம்
நங்கள்உச்சி நம்பெருமான் மேயது நள்ளாறே
(7)
வெஞ்சுடர்த்தீ அங்கையேந்தி, விண்கொள் முழவதிர
அஞ்சிடத்தோர் ஆடல்பாடல் பேணுவதன்றியும் போய்ச்
செஞ்சடைக்கோர் திங்கள்சூடித், திகழ்தரு கண்டத்துள்ளே
நஞ்சடைத்த நம்பெருமான் மேயது நள்ளாறே
(8)
சிட்டமார்ந்த மும்மதிலும் சிலைவரைத் தீயம்பினால்
சுட்டுமாட்டிச் சுண்ண வெண்ணீறாடுவது அன்றியும்போய்ப்
பட்டமார்ந்த சென்னி மேலோர் பால்மதியம் சூடி
நட்டமாடும் நம்பெருமான் மேயது நள்ளாறே
(9)
உண்ணலாகா நஞ்சு கண்டத்துண்டு உடனே ஒடுக்கி
அண்ணலாகா அண்ணல்நீழல் ஆரழல் போலுருவம்
எண்ணலாகா உள்வினை என்றெள்க வலித்து, இருவர்
நண்ணலாகா நம்பெருமான் மேயது நள்ளாறே
(10)
மாசுமெய்யர், மண்டைத் தேரர், குண்டர் குணமிலிகள்
பேசும் பேச்சை மெய்யென்றெண்ணி அந்நெறி செல்லல்மின்
மூசுவண்டார் கொன்றைசூடி மும்மதிளும் உடனே
நாசம் செய்த நம்பெருமான் மேயது நள்ளாறே
(11)
தண்புனலும் வெண்பிறையும் தாங்கிய தாழ்சடையன்
நண்புநல்லார் மல்குகாழி ஞானசம்பந்தன் நல்ல
பண்புநள்ளாறு ஏத்துபாடல் பத்தும் இவைவல்லார்
உண்புநீங்கி வானவரோடு உலகில் உறைவாரே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page