(1)
தளிரிள வளரொளி தனதெழில் தருதிகழ் மலைமகள்
குளிரிள வளரொளி வனமுலை இணையவை குலவலின்
நளிரிள வளரொளி மருவு நள்ளாறர் தம் நாமமே
மிளிரிள வளர்எரியிடில் இவை பழுதிலை மெய்ம்மையே
(2)
போதமர் தருபுரி குழலெழில் மலைமகள் பூணணி
சீதமதணிதரு முகிழிள வனமுலை செறிதலின்
நாதமதெழிலுரு அனைய நள்ளாறர்தம் நாமமே
மீதமதெரியினில் இடிலிவை பழுதிலை மெய்ம்மையே
(3)
இட்டுறு மணியணி இணர்புணர் வளரொளி எழில்வடம்
கட்டுறு கதிரிள வனமுலை இணையொடு கலவலின்
நட்டுறு செறிவயல் மருவு நள்ளாறர்தம் நாமமே
இட்டுறும் எரியினில் இடிலிவை பழுதிலை மெய்ம்மையே
(4)
மைச்சணி அரியரி நயனிதொல் மலைமகள் பயனுறு
கச்சணி கதிரிள வனமுலை அவையொடு கலவலின்
நச்சணி மிடறுடை அடிகள் நள்ளாறர்தம் நாமமே
மெச்சணி எரியினில் இடிலிவை பழுதிலை மெய்ம்மையே
(5)
பண்ணியல் மலைமகள் கதிர்விடு பருமணி அணிநிறக்
கண்ணியல் கலசமதனமுலை இணையொடு கலவலின்
நண்ணிய குளிர்புனல் புகுது நள்ளாறர்தம் நாமமே
விண்ணியல் எரியினில் இடிலிவை பழுதிலை மெய்ம்மையே
(6)
போதுறு புரிகுழல் மலைமகள் இளவளர் பொன்னணி
சூதுறு தளிர்நிற வனமுலை அவையொடு துதைதலின்
தாதுறு நிறமுடை அடிகள் நள்ளாறர்தம் நாமமே
மீதுறும் எரியினில் இடிலிவை பழுதிலை மெய்ம்மையே
(7)
கார்மலி நெறிபுரி சுரிகுழல் மலைமகள் கவினுறு
சீர்மலி தருமணி அணிமுலை திகழ்வொடு செறிதலின்
தார்மலி நகுதலை உடைய நள்ளாறர்தம் நாமமே
ஏர்மலி எரியினில் இடிலிவை பழுதிலை மெய்ம்மையே
(8)
மன்னிய வளரொளி மலைமகள் தளிர்நிற மதமிகு
பொன்னியல் மணியணி கலசமதனமுலை புணர்தலின்
தன்னியல் தசமுகன் நெரிய நள்ளாறர்தம் நாமமே
மின்னியல் எரியினில் இடிலிவை பழுதிலை மெய்ம்மையே
(9)
கான்முக மயிலியல் மலைமகள் கதிர்விடு கனமிகு
பால்முகம் இயல்பணை இணைமுலை துணையொடு பயிறலின்
நான்முகன் அரி அறிவரிய நள்ளாறர்தம் நாமமே
மேன்முக எரியினில் இடிலிவை பழுதிலை மெய்ம்மையே
(10)
அத்திர நயனிதொல் மலைமகள் பயனுறும் அதிசயச்
சித்திர மணியணி திகழ்முலை இணையொடு செறிதலின்
புத்தரொடமணர் பொய் பெயரும் நள்ளாறர்தம் நாமமே
மெய்த்திரள் எரியினில் இடிலிவை பழுதிலை மெய்ம்மையே
(11)
சிற்றிடை அரிவைதன் வனமுலை இணையொடு செறிதரும்
நற்றிறம் உறு கழுமல நகர் ஞானசம்பந்தன்
கொற்றவன் எதிரிடை எரியினில் இடஇவை கூறிய
சொல்தெரி ஒருபதும் அறிபவர் துயரிலர் தூயரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...