(1)
வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல்லாம், அரன் நாமமே
சூழ்க, வையகமும் துயர் தீர்கவே
(2)
அரிய காட்சியராய்த் தமது அங்கைசேர்
எரியர், ஏறுகந்தேறுவர், கண்டமும்
கரியர், காடுறை வாழ்க்கையர், ஆயினும்
பெரியர், ஆரறிவார் அவர் பெற்றியே
(3)
வெந்த சாம்பல் விரையெனப் பூசியே
தந்தையாரொடு தாயிலர், தம்மையே
சிந்தியா எழுவார் வினை தீர்ப்பரால்
எந்தையார் அவர் எவ்வகையார் கொலோ
(4)
ஆட்பாலவர்க்கருளும் வண்ணமும், ஆதி மாண்பும்
கேட்பான் புகில் அளவில்லை கிளக்க வேண்டா
கோட்பாலனவும் வினையும் குறுகாமை எந்தை
தாள்பால் வணங்கித் தலைநின்று இவைகேட்க தக்கார்
(5)
ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச்
சோதிக்க வேண்டா, சுடர்விட்டுளன் எங்கள் சோதி
மாதுக்க நீங்கல் உறுவீர், மனம்பற்றி வாழ்மின்
சாதுக்கள் மிக்கீர் இறையே வந்து சார்மின்களே
(6)
ஆடும் எனவும், அருங்கூற்றம் உதைத்து வேதம்
பாடும் எனவும், புகழ் அல்லது பாவம் நீங்கக்
கேடும் பிறப்பும் அறுக்கும் எனக் கேட்டீராகில்
நாடும் திறத்தார்க்கு அருளல்லது நாட்டலாமே
(7)
கடிசேர்ந்த போது மலரான கைக்கொண்டு, நல்ல
படிசேர்ந்த பால்கொண்டங்கு ஆட்டிடத் தாதை பண்டு
முடிசேர்ந்த காலை அறவெட்டிட முக்கண் மூர்த்தி
அடிசேர்ந்த வண்ணம் அறிவார் சொலக்கேட்டும் அன்றே
(8)
வேத முதல்வன் முதலாக விளங்கி, வையம்
ஏதப் படாமை உலகத்தவர் ஏத்தல் செய்யப்
பூத முதல்வன் முதலே முதலாப் பொலிந்த
சூதன் ஒலிமாலை என்றே கலிக்கோவை சொல்லே
(9)
பாராழி வட்டம் பகையால் நலிந்தாட்ட, ஆடிப்
பேராழி ஆனதிடர் கண்டு அருள்செய்தல் பேணி
நீராழி விட்டேறி நெஞ்சிடம் கொண்டவர்க்குப்
போராழி ஈந்த புகழும் புகழ் உற்றதன்றே
(10)
மாலாயவனும், மறைவல்ல நான்முகனும்
பாலாய தேவர் பகரில் அமுதூட்டல் பேணிக்
காலாய முந்நீர் கடைந்தார்க்கு அரிதாய் எழுந்த
ஆலாலம் உண்டு அங்கமரர்க்கு அருள் செய்ததாமே
(11)
அற்றன்றி அந்தண் மதுரைத் தொகை ஆக்கினானும்
தெற்றென்று தெய்வம் தெளியார், கரைக்கு ஓலை தெண்ணீர்ப்
பற்றின்றிப் பாங்குஎதிர்வின் ஊரவும், பண்பு நோக்கில்
பெற்றொன்று உயர்த்த பெருமான் பெருமானும் அன்றே
(12)
நல்லார்கள் சேர்புகலி ஞானசம்பந்தன், நல்ல
எல்லார்களும் பரவும் ஈசனை ஏத்து பாடல்
பல்லார்களும் மதிக்கப் பாசுரம் சொன்ன பத்தும்
வல்லார்கள் வானோர் உலகாளவும் வல்லர் அன்றே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...