(1)
பாடக மெல்லடிப் பாவையோடும் படுபிணக் காடிடம் பற்றிநின்று
நாடகமாடும் நள்ளாறுடைய நம்பெருமான் இது என்கொல் சொல்லாய்
சூடக முன்கை மடந்தைமார்கள் துணைவரொடும் தொழுதேத்தி வாழ்த்த
ஆடகமாடம் நெருங்குகூடல் ஆலவாயின்கண் அமர்ந்தவாறே
(2)
திங்களம் போதும் செழும்புனலும், செஞ்சடை மாட்டயல் வைத்துகந்து
நங்கண் மகிழும் நள்ளாறுடைய நம்பெருமான் இதுஎன்கொல் சொல்லாய்
பொங்கிள மென்முலையார்களோடும் புனமயிலாட நிலாமுளைக்கும்
அங்கழகச் சுதைமாடக் கூடல் ஆலவாயின்கண் அமர்ந்தவாறே
(3)
தண்ணறு மத்தமும் கூவிளமும், வெண்தலை மாலையும் தாங்கி, யார்க்கும்
நண்ணலரிய நள்ளாறுடைய நம்பெருமான் இதுஎன்கொல் சொல்லாய்
புண்ணிய வாணரும் மாதவரும் புகுந்துடன்ஏத்தப், புனையிழையார்
அண்ணலின் பாடலெடுக்கும் கூடல் ஆலவாயின்கண் அமர்ந்தவாறே
(4)
பூவினில் வாசம், புனலில்பொற்புப் புதுவிரைச் சாந்தினில் நாற்றத்தோடு
நாவினில் பாடல் நள்ளாறுடைய நம்பெருமான் இதுஎன்கொல் சொல்லாய்
தேவர்கள் தானவர் சித்தர் விச்சாதரர் கணத்தோடும் சிறந்து பொங்கி
ஆவினில் ஐந்துகந்தாட்டும் கூடல் ஆலவாயின்கண் அமர்ந்தவாறே
(5)
செம்பொன்செய் மாலையும், வாசிகையும், திருந்து புகையும், அவியும்பாட்டும்
நம்பும் பெருமை நள்ளாறுடைய நம்பெருமான் இதுஎன்கொல் சொல்லாய்
உம்பரும், நாகருலகம் தானும், ஒலிகடல் சூழ்ந்த உலகத்தோரும்
அம்புத நால்களால் நீடும்கூடல் ஆலவாயின்கண் அமர்ந்தவாறே
(6)
பாகமும் தேவியை வைத்துக்கொண்டு, பைவிரி துத்திப்பரிய பேழ்வாய்
நாகமும் பூண்ட நள்ளாறுடைய நம்பெருமான் இதுஎன்கொல் சொல்லாய்
போகமும் நின்னை மனத்துவைத்துப் புண்ணியர் நண்ணும் புணர்வுபூண்ட
ஆகமுடையவர் சேரும்கூடல் ஆலவாயின்கண் அமர்ந்தவாறே
(7)
கோவண ஆடையும், நீறுப்பூச்சும், கொடுமழுவேந்தலும், செஞ்சடையும்
நாவணப் பாட்டும், நள்ளாறுடைய நம்பெருமான் இதுஎன்கொல் சொல்லாய்
பூவண மேனி இளையமாதர் பொன்னும் மணியும் கொழித்தெடுத்து
ஆவண வீதியிலாடும்கூடல் ஆலவாயின்கண் அமர்ந்தவாறே
(8)
இலங்கை இராவணன் வெற்பெடுக்க எழில் விரலூன்றி இசைவிரும்பி
நலங்கொளச் சேர்ந்த நள்ளாறுடைய நம்பெருமான் இதுஎன்கொல் சொல்லாய்
புலன்களைச் செற்றுப் பொறியைநீக்கிப் புந்தியிலும் நினைச் சிந்தைசெய்யும்
அலங்கல் நல்லார்கள் அமரும்கூடல் ஆலவாயின்கண் அமர்ந்தவாறே
(9)
பணியுடை மாலும், மலரினோனும், பன்றியும் வென்றிப் பறவையாயும்
நணுகலரிய நள்ளாறுடைய நம்பெருமான் இதுஎன்கொல் சொல்லாய்
மணியொலி சங்கொலியோடு மற்றை மாமுரசின் ஒலியென்றும்ஓவா
தணிகிளர் வேந்தர் புகுதும்கூடல் ஆலவாயின்கண் அமர்ந்தவாறே
(10)
தடுக்குடைக் கையரும், சாக்கியரும், சாதியின் நீங்கிஅவத் தவத்தர்
நடுக்குற நின்ற நள்ளாறுடைய நம்பெருமான் இதுஎன்கொல் சொல்லாய்
எடுக்கும் விழவும், நன்னாள்விழவும், இரும்பலியின் பினோடு எத்திசையும்
அடுக்கும் பெருமைசேர் மாடக்கூடல் ஆலவாயின்கண் அமர்ந்தவாறே
(11)
அன்புடையானை அரனைக், கூடல்ஆலவாய் மேவியதென் கொல்என்று
நன்பொனை நாதனை, நள்ளாற்றானை நயம்பெறப் போற்றி நலங்குலாவும்
பொன்புடை சூழ்தரு மாடக்காழிப் பூசுரன் ஞானசம்பந்தன் சொன்ன
இன்புடைப் பாடல்கள் பத்தும்வல்லார் இமையவர்ஏத்த இருப்பர் தாமே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...