(1)
வண்டிரிய விண்டமலர் மல்குசடை தாழ விடையேறிப்
பண்டெரிகை கொண்ட பரமன் பதியதென்பர், அதன்அயலே
நண்டிரிய நாரையிரை தேரவரை மேலருவி முத்தம்
தெண்திரைகள் மோதவிரி போது கமழும் திருநலூரே
(2)
பல்வளரு நாகம் அரையார்த்து, வரைமங்கை ஒருபாகம்
மல்வளர் புயத்தில் அணைவித்து மகிழும் பரமன் இடமாம்
சொல்வளர் இசைக்கிளவி பாடி, மடவார் நடமதாடிச்
செல்வ மறையோர்கள் முறையேத்த வளரும் திருநலூரே
(3)
நீடுவரை மேரு விலதாக, நிகழ் நாகம் அழலம்பால்
கூடலர்கண் மூவெயில் எரித்த குழகன் குலவு சடைமேல்
ஏடுலவு கொன்றைபுனல் நின்று திகழும் நிமலன் இடமாம்
சேடுலவு தாமரைகள் நீடுவயலார் திருநலூரே
(4)
கருகுபுரி மிடறர், கரி காடர், எரி கையதனில் ஏந்தி
அருகுவரு கரியின்உரி அதளர், பட அரவர் இடம் வினவில்
முருகுவிரி பொழிலின்மணம் நாற மயிலால மரமேறித்
திருகுசின மந்தி கனிசிந்த மதுவார் திருநலூரே
(5)
பொடிகொள் திருமார்பர், புரிநூலர், புனல் பொங்கரவு தங்கும்
முடிகொள் சடைதாழ விடையேறு முதலாளர் அவரிடமாம்
இடிகொள் முழவோசை எழிலார் செய் தொழிலாளர் விழ மல்கச்
செடிகொள் வினையகல மனம் இனியவர்கள் சேர் திருநலூரே
(6)
புற்றரவர், நெற்றியொர் கண், ஒற்றை விடையூர்வர், அடையாளம்
சுற்றமிருள் பற்றிய பல்பூதம் இசைபாட, நசையாலே
கற்றமறை உற்றுணர்வர், பற்றலர்கள் முற்றும் எயில் மாளச்
செற்றவர் இருப்பிடம் நெருக்கு புனலார் திருநலூரே
(7)
பொங்கரவர் அங்கமுடன் மேலணிவர், ஞாலமிடு பிச்சை
தங்கரவமாக உழிதந்து, மெய் துலங்கிய வெண்ணீற்றர்
கங்கைஅரவம் விரவு திங்கள்சடை அடிகள் இடம் வினவில்
செங்கயல் வதிக் குதிகொளும் புனலதார் திருநலூரே
(8)
ஏறுபுகழ் பெற்ற தெனிலங்கையவர் கோனை அருவரையில்
சீறியவனுக்கருளும் எங்கள் சிவலோகன் இடமாகும்
கூறும்அடியார்கள் இசைபாடி வலம் வந்தயரும் அருவிச்
சேறு கமரான வழியத் திகழ்தரும் திருநலூரே
(9)
மாலும் மலர் மேலயனும் நேடி அறியாமை எரியாய
கோலமுடையான், உணர்வு கோதில் புகழான் இடமதாகும்
நாலுமறை அங்க முதலாறும் எரி மூன்று தழலோம்பும்
சீலமுடையார்கள் நெடுமாடம் வளரும் திருநலூரே
(10)
கீறுமுடை கோவணம் இலாமையில் ஒலோவிய தவத்தர்
பாறுமுடன் மூடுதுவர் ஆடையர்கள் வேடமவை பாரேல்
ஏறு மடவாளொடு இனிதேறி முனிருந்த இடமென்பர்
தேறுமன வாரம் உடையார் குடிசெயும் திருநலூரே
(11)
திரைகள்இரு கரையும்வரு பொன்னி நிலவும் திருநலூர் மேல்
பரசுதரு பாணியை நலந்திகழ்செய் தோணிபுர நாதன்
உரைசெய் தமிழ்ஞான சம்பந்தன் இசைமாலை மொழிவார் போய்
விரைசெய் மலர்தூவ விதிபேணு கதிபேறு பெறுவாரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...