(1)
பெண்ணமரும் திருமேனி உடையீர், பிறங்கு சடைதாழப்
பண்ணமரும் நான்மறையே பாடியாடல் பயில்கின்றீர்
திண்ணமரும் பைம்பொழிலும் வயலும் சூழ்ந்த திருநல்லூர்
மண்ணமரும் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே
(2)
அலைமல்கு தண்புனலும் பிறையும்சூடி, அங்கையில்
கொலைமல்கு வெண்மழுவு அனலும்ஏந்தும் கொள்கையீர்
சிலைமல்கு வெங்கணையால் புரமூன்றெரித்தீர், திருநல்லூர்
மலைமல்கு கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே
(3)
குறை நிரம்பா வெண்மதியம் சூடிக்குளிர் புன்சடை தாழப்
பறைநவின்ற பாடலோடு ஆடல்பேணிப் பயில்கின்றீர்
சிறைநவின்ற தண்புனலும் வயலும் சூழ்ந்த திருநல்லூர்
மறைநவின்ற கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே
(4)
கூனமரும் வெண்பிறையும் புனலுஞ்சூடும் கொள்கையீர்
மானமரும் மென்விழியாள் பாகமாகும் மாண்பினீர்
தேனமரும் பைம்பொழிலின் வண்டுபாடும் திருநல்லூர்
வானமரும் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே
(5)
நிணங்கவரு மூவிலையும் அனலுமேந்தி நெறிகுழலாள்
அணங்கமரும் பாடலோடு ஆடல்மேவும் அழகினீர்
திணங்கவரும் ஆடரவும் பிறையும்சூடித் திருநல்லூர்
மணங்கமழும் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே
(6)
கார்மருவு பூங்கொன்றைசூடிக் கமழ் புன்சடை தாழ
வார்மருவு மென்முலையாள் பாகமாகும் மாண்பினீர்
தேர்மருவு நெடுவீதிக் கொடிகளாடும் திருநல்லூர்
ஏர்மருவு கோயிலே கோயிலாக இருந்தீரே
(7)
ஊன்தோயும் வெண்மழுவும் அனலுமேந்தி உமைகாண
மீன்தோயும் திசைநிறைய ஓங்கியாடும் வேடத்தீர்
தேன்தோயும் பைம்பொழிலின் வண்டுபாடும் திருநல்லூர்
வான்தோயும் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே
(8)
காதமரும் வெண்குழையீர் கறுத்த அரக்கன் மலையெடுப்ப
மாதமரு மென்மொழியால் மறுகும் வண்ணம் கண்டுகந்தீர்
தீதமரா அந்தணர்கள் பரவியேத்தும் திருநல்லூர்
மாதமரும் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே
(9)
போதின்மேல் அயன்திருமால் போற்றி உம்மைக் காணாது
நாதனே இவனென்று நயந்தேத்த மகிழ்ந்தளித்தீர்
தீதிலா அந்தணர்கள் தீமூன்றோம்பும் திருநல்லூர்
மாதராள் அவளோடு மன்னுகோயில் மகிழ்ந்தீரே
(10)
பொல்லாத சமணரொடு புறங்கூறும் சாக்கியர்ஒன்று
அல்லாதார் அறவுரைவிட்டு, அடியார்கள் போற்றோவா
நல்லார்கள் அந்தணர்கள் நாளுமேத்தும் திருநல்லூர்
மல்லார்ந்த கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே
(11)
கொந்தணவும் பொழில்புடைசூழ் கொச்சைமேவு குலவேந்தன்
செந்தமிழின் சம்பந்தன் சிறைவண் புனல்சூழ் திருநல்லூர்ப்
பந்தணவு மெல்விரலாள் பங்கன் தன்னைப் பயில்பாடல்
சிந்தனையால் உரைசெய்வார் சிவலோகம் சேர்ந்திருப்பாரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...