திருநல்லூர் – சம்பந்தர் தேவாரம் (1):

<– திருநல்லூர்

(1)
கொட்டும் பறை சீரால் குழும அனலேந்தி
நட்டம் பயின்றாடு நல்லூர்ப் பெருமானை
முட்டின்றிரு போது முனியாதெழுந்து அன்பு
பட்ட மனத்தார்கள் அறியார் பாவமே
(2)
ஏறில் எருதேறும், எழில்ஆயிழையோடும்
வேறும் உடனுமாம் விகிர்தர் அவரென்ன
நாறும் மலர்ப்பொய்கை நல்லூர்ப் பெருமானைக்
கூறும் அடியார்கட்கடையா குற்றமே
(3)
சூடும் இளந்திங்கள் சுடர்பொற் சடைதாழ
ஓடுண் கலனாக, ஊரூர் இடுபிச்சை
நாடும் நெறியானை நல்லூர்ப் பெருமானைப்
பாடும் அடியார்கட்கடையா பாவமே
(4)
நீத்த நெறியானை நீங்காத் தவத்தானை
நாத்த நெறியானை நல்லூர்ப் பெருமானைக்
காத்த நெறியானைக் கைகூப்பித் தொழுது
ஏத்தும் அடியார்கட்கில்லை இடர் தானே
(5)
ஆகத்துமை கேள்வன் அரவச் சடைதாழ
நாகம் அசைத்தானை நல்லூர்ப் பெருமானைத்
தாகம் புகுந்தண்மித் தாள்கள் தொழும் தொண்டர்
போக மனத்தராய்ப் புகழத் திரிவாரே
(6)
கொல்லும் களியானை உரிபோர்த்து உமையஞ்ச
நல்ல நெறியானை நல்லூர்ப் பெருமானைச்
செல்லு நெறியானைச் சேர்ந்தார் இடர்தீரச்
சொல்லும் அடியார்கள் அறியார் துக்கமே
(7)
எங்கள் பெருமானை, இமையோர் தொழுதேத்தும்
நங்கள் பெருமானை, நல்லூர் பிரிவில்லாத்
தங்கை தலைக்கேற்றி ஆளென்று அடிநீழல்
தங்கு மனத்தார்கள் தடுமாற்றறுப்பாரே
(8)
காமன்எழில் வாட்டிக், கடல்சூழ் இலங்கைக்கோன்
நாமம் இறுத்தானை, நல்லூர்ப் பெருமானை
ஏம மனத்தாராய் இகழாதெழும் தொண்டர்
தீப மனத்தார்கள் அறியார் தீயவே
(9)
வண்ண மலரானும், வையம் அளந்தானும்
நண்ணல் அரியானை நல்லூர்ப் பெருமானைத்
தண்ண மலர்தூவித் தாள்கள் தொழுதேத்த
எண்ணும் அடியார்கட்கில்லை இடுக்கணே
(10)
பிச்சக் குடைநீழல் சமணர் சாக்கியர்
நிச்ச மலர் தூற்ற நின்ற பெருமானை
நச்சு மிடற்றானை நல்லூர்ப் பெருமானை
எச்சும் அடியார்கட்கில்லை இடர் தானே
(11)
தண்ணம் புனற்காழி ஞானசம்பந்தன்
நண்ணும் புனல்வேலி நல்லூர்ப் பெருமானை
வண்ணம் புனைமாலை வைகல்ஏத்துவார்
விண்ணும் நிலனுமாய் விளங்கும் புகழாரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page