திருநல்லூர் – அப்பர் தேவாரம் (1):

<– திருநல்லூர்

(1)
அட்டுமின் இல்பலி என்றென்று அகங்கடை தோறும்வந்து
மட்டவிழும் குழலார் வளைகொள்ளும் வகை என்கொலோ
கொட்டிய பாணி எடுத்திட்ட பாதமும் கோளரவும்
நட்ட நின்றாடிய நாதர் நல்லூர் இடம் கொண்டவரே
(2)
பெண்ணிட்டம் பண்டையதன்று இவை பெய் பலிக்கென்றுழல்வார்
நண்ணிட்டு வந்து மனை புகுந்தாரும், நல்லூர் அகத்தே
பண்ணிட்ட பாடலர் ஆடலராய்ப் பற்றி நோக்கிநின்று
கண்ணிட்டுப் போயிற்றுக் காரணமுண்டு கறைக்கண்டரே
(3)
படவேர் அரவல்குல் பாவை நல்லீர், பகலே ஒருவர்
இடுவார் இடைப்பலி கொள்பவர் போல வந்தில் புகுந்து
நடவார் அடிகள் நடம் பயின்றாடிய கூத்தர் கொலோ
வடபால் கயிலையும் தென்பால் நல்லூரும்தம் வாழ்பதியே
(4)
செஞ்சுடர்ச் சோதிப் பவளத்திரள் திகழ் முத்தனைய
நஞ்சணி கண்டன் நல்லூர்உறை நம்பனை நானொரு கால்
துஞ்சிடைக் கண்டு கனவின் தலைத் தொழுதேற்கு அவன்தான்
நெஞ்சிடை நின்றகலான் பல காலமும் நின்றனனே
(5)
வெண்மதி சூடி விளங்க நின்றானை விண்ணோர்கள் தொழ
நண்ணிலயத்தொடு பாடலறாத நல்லூர் அகத்தே
திண்ணிலயம் கொண்டு நின்றான், திரிபுரம் மூன்றெரித்தான்
கண்ணுளும் நெஞ்சத்தகத்தும் உள கழல்சேவடியே
(6)
தேற்றப்படத் திருநல்லூர் அகத்தே சிவனிருந்தால்
தோற்றப்படச் சென்று கண்டு கொள்ளார் தொண்டர், துன்மதியால்
ஆற்றில் கெடுத்துக் குளத்தினில் தேடிய ஆதரைப்போல்
காற்றில் கடுத்து உலகெல்லாம் திரிதர்வர் காண்பதற்கே
(7)
நாட்கொண்ட தாமரைப் பூத்தடம் சூழ்ந்த நல்லூர் அகத்தே
கீள்கொண்ட கோவணம் காவென்று சொல்லிக் கிறிபடத்தான்
வாள்கொண்ட நோக்கி மனைவியொடும் அங்கொர் வாணிகனை
ஆட்கொண்ட வார்த்தை உரைக்குமன்றோ இவ்வகலிடமே
(8)
அறைமல்கு பைங்கழல் ஆர்ப்ப நின்றான், அணியார் சடைமேல்
நறைமல்கு கொன்றையந்தார் உடையான், நல்லூர் அகத்தே
பறைமல்கு பாடலன் ஆடலனாகிப் பரிசழித்தான்
பிறைமல்கு செஞ்சடைதாழ நின்றாடிய பிஞ்ஞகனே
(9)
மன்னிய மாமறையோர் மகிழ்ந்தேத்த மருவியெங்கும்
துன்னிய தொண்டர்கள் இன்னிசை பாடித் தொழுது நல்லூர்க்
கன்னியர் தாமும் கனவிடை உன்னிய காதலரை
அன்னியர் அற்றவர் அங்கணனே அருள் நல்கென்பரே
(10)
திருஅமர் தாமரை சீர்வளர் செங்கழு நீர்கொள் நெய்தல்
குருவமர் கோங்கம் குராமகிழ் சண்பகம் கொன்றைவன்னி
மருவமர் நீள்கொடி மாடமலி மறையோர்கள் நல்லூர்
உருவமர் பாகத்துமையவள் பாகனை உள்குதுமே
(11)
செல்லேர் கொடியன் சிவன் பெருங்கோயில் சிவபுரமும்
வல்லேன் புகவும் மதில்சூழ் இலங்கையர் காவலனைக்
கல்லார் முடியொடு தோளிறச் செற்ற கழலடியான்
நல்லூர் இருந்த பிரானல்லனோ நம்மை ஆள்பவனே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page