(1)
நினைந்துருகும் அடியாரை நைய வைத்தார்
நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார்
சினந்திருகு களிற்றுரிவைப் போர்வை வைத்தார்
செழுமதியின் தளிர்வைத்தார் சிறந்து வானோர்
இனந்துருவி மணிமகுடத் தேறத்துற்ற
இனமலர்கள் போதவிழ்ந்து மதுவாய்ப் பில்கி
நனைந்தனைய திருவடியென் தலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்லவாறே
(2)
பொன்நலத்த நறுங்கொன்றை சடைமேல் வைத்தார்
புலியுரியின் அதள்வைத்தார், புனலும் வைத்தார்
மன்நலத்த திரள்தோள் மேல் மழுவாள் வைத்தார்
வார்காதில் குழைவைத்தார், மதியும் வைத்தார்
மின்நலத்த நுண்ணிடையாள் பாகம் வைத்தார்
வேழத்தின் உரிவைத்தார், வெண்ணூல் வைத்தார்
நன்னலத்த திருவடியென் தலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்லவாறே
(3)
தோடேறு மலர்க்கொன்றை சடைமேல் வைத்தார்
துன்னெருக்கின் வடம் வைத்தார், துவலை சிந்தப்
பாடேறு படுதிரைகள் எறிய வைத்தார்
பனிமத்த மலர் வைத்தார், பாம்பும் வைத்தார்
சேடேறு திருநுதல்மேல் நாட்டம் வைத்தார்
சிலை வைத்தார், மலைபெற்ற மகளை வைத்தார்
நாடேறு திருவடியென் தலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்லவாறே
(4)
வில்லருளி வருபுருவத்தொருத்தி பாகம்
பொருத்தாகி விரிசடைமேல் அருவி வைத்தார்
கல்லருளி வரிசிலையா வைத்தார், ஊராக்
கயிலாய மலை வைத்தார், கடவூர் வைத்தார்
சொல்லருளி அறம் நால்வர்க்கறிய வைத்தார்
சுடுசுடலைப் பொடி வைத்தார், துறவி வைத்தார்
நல்லருளால் திருவடியென் தலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்லவாறே
(5)
விண்ணிரியும் திரிபுரங்கள் எரிய வைத்தார்
வினை தொழுவார்க்கற வைத்தார், துறவி வைத்தார்
கண்ணெரியால் காமனையும் பொடியா வைத்தார்
கடிக்கமல மலர் வைத்தார், கயிலை வைத்தார்
திண்ணெரியும் தண்புனலும் உடனே வைத்தார்
திசைதொழுது மிசைஅமரர் திகழ்ந்து வாழ்த்தி
நண்ணரிய திருவடியென் தலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்லவாறே
(6)
உற்றுலவு பிணியுலகத்தெழுமை வைத்தார்
உயிர் வைத்தார், உயிர்செல்லும் கதிகள் வைத்தார்
மற்றமரர் கணம் வைத்தார், அமரர் காணா
மறை வைத்தார், குறைமதியம் வளர வைத்தார்
செற்றமலி ஆர்வமொடு காமலோபம்
சிறவாத நெறி வைத்தார், துறவி வைத்தார்
நற்றவர்சேர் திருவடியென் தலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்லவாறே
(7)
மாறு மலைந்தார் அரணம் எரிய வைத்தார்
மணிமுடிமேல் அர வைத்தார், அணிகொள் மேனி
நீறு மலிந்தெரியாடல் நிலவ வைத்தார்
நெற்றிமேல் கண் வைத்தார், நிலையம் வைத்தார்
ஆறு மலைந்தறு திரைகள் எறிய வைத்தார்
ஆர்வத்தால் அடியமரர் பரவ வைத்தார்
நாறுமலர்த் திருவடியென் தலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்லவாறே
(8)
குலங்கள்மிகு மலைகடல்கள் ஞாலம் வைத்தார்
குருமணி சேர் அரவைத்தார் கோலம் வைத்தார்
உலங்கிளரும் அரவத்தின் உச்சி வைத்தார்
உண்டருளி விடம் வைத்தார், எண்தோள் வைத்தார்
நிலங்கிளரும் புனல் கனலுள் அனிலம் வைத்தார்
நிமிர் விசும்பின் மிசை வைத்தார், நினைந்தார் இந்நாள்
நலங்கிளரும் திருவடியென் தலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்லவாறே
(9)
சென்றுருளும் கதிரிரண்டும் விசும்பில் வைத்தார்
திசைபத்தும் இருநிலத்தில் திருந்த வைத்தார்
நின்றருளி அடியமரர் வணங்க வைத்தார்
நிறைதவமும் மறைபொருளும் நிலவ வைத்தார்
கொன்றருளிக் கொடுங்கூற்றம் நடுங்கியோடக்
குரைகழற் சேவடி வைத்தார், விடையும் வைத்தார்
நன்றருளும் திருவடியென் தலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்லவாறே
(10)
பாம்புரிஞ்சி மதிகிடந்து திரைகளேங்கப்
பனிக்கொன்றை சடைவைத்தார், பணிசெய் வானோர்
ஆம்பரிசு தமக்கெல்லாம் அருளும் வைத்தார்
அடுசுடலைப் பொடி வைத்தார், அழகும் வைத்தார்
ஓம்பரிய வல்வினை நோய் தீர வைத்தார்
உமையையொரு பால் வைத்தார், உகந்து வானோர்
நாம்பரவும் திருவடிஎன் தலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்லவாறே
(11)
குலங்கிளரும் வருதிரைகள் ஏழும் வைத்தார்
குருமணிசேர் மலை வைத்தார், மலையைக் கையால்
உலங்கிளர எடுத்தவன்தோள் முடியும் நோவ
ஒருவிரலால் உறவைத்தார், இறைவா என்று
புலம்புதலும் அருளொடு போர் வாளும் வைத்தார்
புகழ்வைத்தார் புரிந்தாளாக் கொள்ள வைத்தார்
நலங்கிளரும் திருவடியென் தலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்லவாறே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...