(1)
கல்லால் நிழல்மேய கறைசேர் கண்டா என்று
எல்லா மொழியாலும் இமையோர் தொழுதேத்த
வில்லால் அரண்மூன்றும் வெந்து விழவெய்த
நல்லான் நமையாள்வான் நல்லன் நகரானே
(2)
தக்கன் பெருவேள்வி தன்னில் அமரரைத்
துக்கம் பலசெய்து சுடர்பொற் சடைதாழக்
கொக்கின் இறகோடு குளிர்வெண் பிறைசூடும்
நக்கன் நமையாள்வான் நல்லன் நகரானே
(3)
அந்தி மதியோடும் அரவச் சடைதாழ
முந்தி அனலேந்தி முதுகாட்டெரியாடி
சிந்தித்தெழ வல்லார் தீரா வினை தீர்க்கும்
நந்தி நமையாள்வான் நல்லன் நகரானே
(4)
குளிரும் மதிசூடிக் கொன்றைச் சடைதாழ
மிளிரும் அரவோடு வெண்ணூல் திகழ்மார்பில்
தளிரும் திருமேனித் தையல் பாகமாய்
நளிரும் வயல்சூழ்ந்த நல்லன் நகரானே
(5)
மணியார் திகழ்கண்டம் உடையான் மலர்மல்கு
பிணிவார் சடைஎந்தை பெருமான் கழல்பேணித்
துணிவார் மலர்கொண்டு தொண்டர் தொழுதேத்த
நணியான் நமையாள்வான் நல்லன் நகரானே
(6)
வாசம் மலர்மல்கு மலையான் மகளோடும்
பூசும் சுடுநீறு புனைந்தான் விரிகொன்றை
ஈசன் எனஉள்கி எழுவார் வினைகட்கு
நாசன் நமையாள்வான் நல்லன் நகரானே
(7)
அங்கோல் வளைமங்கை காண அனலேந்திக்
கொங்கார் நறுங்கொன்றை சூடிக் குழகாக
வெங்காடிடமாக வெந்தீ விளையாடும்
நங்கோன் நமையாள்வான் நல்லன் நகரானே
(8)
பெண்ணார் திருமேனிப் பெருமான் பிறைமல்கு
கண்ணார் நுதலினான் கயிலை கருத்தினால்
எண்ணாதெடுத்தானை இறையே விரலூன்றி
நண்ணார் புரமெய்தான் நல்லன் நகரானே
(9)
நாகத்தணையானும், நளிர்மா மலரானும்
போகத்தியல்பினால் பொலிய அழகாகும்
ஆகத்தவளோடு அமர்ந்தங்கழகாரும்
நாகம் அரையார்த்தான் நல்லன் நகரானே
(10)
குறியில் சமணோடு குண்டர் வண்தேரர்
அறிவில் உரைகேட்டங்கவமே கழியாதே
பொறிகொள் அரவார்த்தான் பொல்லா வினைதீர்க்கும்
நறைகொள் பொழில்சூழ்ந்த நல்லன் நகரானே
(11)
நலமார் மறையோர்வாழ் நல்லன் நகர்மேய
கொலைசேர் மழுவானைக் கொச்சை அமர்ந்தோங்கு
தலமார் தமிழ்ஞான சம்பந்தன் சொன்ன
கலைகள் இவைவல்லார் கவலை கழிவாரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...