திருநல்லம் – அப்பர் தேவாரம்:

<– திருநல்லம்

(1)
கொல்லத் தான் நமனார் தமர் வந்தக்கால்
இல்லத்தார் செய்யலாவதென் ஏழைகாள்
நல்லத்தான் நமை ஆளுடையான் கழல்
சொல்லத் தான் வல்லிரேல் துயர் தீருமே
(2)
பொக்கம் பேசிப் பொழுது கழியாதே
துக்கம் தீர்வகை சொல்லுவன் கேண்மினோ
தக்கன் வேள்வி தகர்த்த தழல்வண்ணன்
நக்கன் சேர் நல்லம் நண்ணுதல் நன்மையே
(3)
பிணிகொள் வார்குழல் பேதையர் காதலால்
பணிகள் மேவிப் பயனில்லை பாவிகாள்
அணுக வேண்டில் அரன் நெறியாவது
நணுக நாதன் நகர் திருநல்லமே
(4)
தமக்கு நல்லது தம்முயிர் போயினால்
இமைக்கும் போதும் இராது இக்குரம்பைதான்
உமைக்கு நல்லவன் தானுறையும் பதி
நமக்கு நல்லது நல்லம் அடைவதே
(5)
உரை தளர்ந்து உடலார் நடுங்காமுனம்
நரைவிடை உடையான் இடம் நல்லமே
பரவுமின் பணிமின், பணிவாரொடே
விரவுமின், விரவாரை விடுமினே
(6)
அல்லலாக ஐம்பூதங்கள் ஆட்டினும்
வல்லவாறு சிவாய நமவென்று
நல்லம் மேவிய நாதன் அடிதொழ
வெல்ல வந்த வினைப்பகை வீடுமே
(7)
மாதராரொடு மக்களும் சுற்றமும்
பேதமாகிப் பிரிவதன் முன்னமே
நாதன் மேவிய நல்லம் நகர்தொழப்
போதுமின் எழுமின் புகலாகுமே
(8)
வெம்மையான வினைக்கடல் நீங்கிநீர்
செம்மையாய சிவகதி சேரலாம்
சும்மையார் மலர் தூவித் தொழுமினோ
நம்மை ஆளுடையான் இடம் நல்லமே
(9)
காலமான கழிவதன் முன்னமே
ஏலுமாறு வணங்கி நின்றேத்துமின்
மாலும் மாமலரானொடு மாமறை
நாலும் வல்லவர் கோன்இடம் நல்லமே
(10)
மல்லை மல்கிய தோளரக்கன் வலி
ஒல்லையில் ஒழித்தான் உறையும் பதி
நல்ல நல்லம் எனும் பெயர் நாவினால்
சொல்ல வல்லவர் தூநெறி சேர்வரே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page