திருநறையூர்ச் சித்தீச்சரம் – சம்பந்தர் தேவாரம் (1):

<– திருநறையூர்ச் சித்தீச்சரம்

(1)
ஊருலாவு பலி கொண்டு உலகேத்த
நீருலாவு நிமிர் புன்சடை அண்ணல்
சீருலாவு மறையோர் நறையூரில்
சேரும் சித்தீச்சரம் சென்றடை நெஞ்சே
(2)
காடு நாடும் கலக்கப் பலிநண்ணி
ஓடுகங்கை ஒளிர்புன் சடைதாழ
வீடும்ஆக மறையோர் நறையூரில்
நீடும் சித்தீச்சரமே நினை நெஞ்சே
(3)
கல்வியாளர் கனகம் அழல்மேனி
புல்கு கங்கை புரிபுன் சடையான் ஊர்
மல்கு திங்கள் பொழில்சூழ் நறையூரில்
செல்வர் சித்தீச்சரம் சென்றடை நெஞ்சே
(4)
நீடவல்ல நிமிர்புன் சடை தாழ
ஆடவல்ல அடிகள் இடமாகும்
பாடல் வண்டு பயிலும் நறையூரில்
சேடர் சித்தீச்சரமே தெளி நெஞ்சே
(5)
உம்பராலும் உலகின்னவராலும்
தம்பெருமை அளத்தற்கரியார் ஊர்
நண்புலாவு மறையோர் நறையூரில்
செம்பொன் சித்தீச்சரமே தெளி நெஞ்சே
(6)
கூருலாவு படையான், விடையேறி
போருலாவு மழுவான், அனலாடி
பேருலாவு பெருமான் உறையூரில்
சேரும் சித்தீச்சரமே இடமாமே
(7)
அன்றி நின்ற அவுணர் புரமெய்த
வென்றி வில்லி விமலன் விரும்பும் ஊர்
மன்றில் வாச மணமார் நறையூரில்
சென்று சித்தீச்சரமே தெளி நெஞ்சே
(8)
அரக்கன் ஆண்மைஅழிய வரை தன்னால்
நெருக்க ஊன்றும் விரலான் விரும்பும் ஊர்
பரக்கும் கீர்த்தி உடையார் நறையூரில்
திருக்கொள் சித்தீச்சரமே தெளி நெஞ்சே
(9)
ஆழியானும் மலரில் உறைவானும்
ஊழி நாடி உணரார் திரிந்துமேல்
சூழுநேட எரியாம் ஒருவன்சீர்
நீழல் சித்தீச்சரமே நினை நெஞ்சே
(10)
மெய்யின் மாசர் விரிநுண் துகிலிலார்
கையிலுண்டு கழறும் உரை கொள்ளேல்
உய்ய வேண்டில் இறைவன் அறையூரில்
செய்யும் சித்தீச்சரமே தவமாமே
(11)
மெய்த்துலாவு மறையோர் நறையூரில்
சித்தன் சித்தீச்சரத்தை உயர்காழி
அத்தன் பாதம்அணி ஞானசம்பந்தன்
பத்தும் பாடப் பறையும் பாவமே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page