திருநறையூர்ச் சித்தீச்சரம் – சம்பந்தர் தேவாரம் (2):

<– திருநறையூர்ச் சித்தீச்சரம்

(1)
பிறைகொள் சடையர், புலியின் உரியர், பேழ்வாய் நாகத்தர்
கறைகொள் கண்டர், கபாலமேந்தும் கையர், கங்காளர்
மறைகொள் கீதம் பாடச் சேடர் மனையில் மகிழ்வெய்திச்
சிறைகொள் வண்டு தேனார் நறையூர்ச் சித்தீச்சரத்தாரே
(2)
பொங்கார் சடையர், புனலர், அனலர், பூதம் பாடவே
தங்காதலியும் தாமும் உடனாய்த் தனியோர் விடையேறிக்
கொங்கார் கொன்றை வன்னி மத்தம் சூடிக் குளிர் பொய்கைச்
செங்கால் அனமும் பெடையும் சேரும் சித்தீச்சரத்தாரே
(3)
முடிகொள் சடையர், முளைவெண் மதியர், மூவா மேனிமேல்
பொடிகொள் நூலர், புலியின் அதளர், புரி புன்சடை தாழக்
கடிகொள் சோலை வயல்சூழ் மடுவில் கயலார் இனம்பாயக்
கொடிகொள் மாடக் குழாமார் நறையூர்ச் சித்தீச்சரத்தாரே
(4)
பின்தாழ் சடைமேல் நகுவெண் தலையர், பிரமன் தலையேந்தி
மின்தாழ் உருவில் சங்கார், குழை தான் மிளிரும் ஒருகாதர்
பொன்தாழ் கொன்றை செருந்தி புன்னை பொருந்து செண்பகம்
சென்றார் செல்வத் திருவார் நறையூர்ச் சித்தீச்சரத்தாரே
(5)
நீரார் முடியர், கறைகொள் கண்டர், மறைகள் நிறை நாவர்
பாரார் புகழால் பத்தர் சித்தர் பாடியாடவே
தேரார் வீதி முழவார் விழவின் ஒலியும் திசைசெல்லச்
சீரார்கோலம் பொலியும் நறையூர்ச் சித்தீச்சரத்தாரே
(6)
நீண்ட சடையர், நிரை கொள் கொன்றை, விரைகொள் மலர்மாலை
தூண்டுசுடர் பொன்னொளி கொள் மேனிப் பவளத்தெழிலார், வந்து
ஈண்டு மாடம் எழிலார் சோலை இலங்கு கோபுரம்
தீண்டு மதியம் திகழும் நறையூர்ச் சித்தீச்சரத்தாரே
(7)
குழலார் சடையர், கொக்கின் இறகர், கோல நிற மத்தம்
தழலார் மேனித் தவள நீற்றர், சரிகோவணக் கீளர்
எழிலார் நாகம் புலியின் உடைமேல் இசைத்து விடையேறிக்
கழலார் சிலம்பு புலம்ப வருவார் சித்தீச்சரத்தாரே
(8)
கரையார் கடல்சூழ் இலங்கை மன்னன் கயிலை மலைதன்னை
வரையார் தோளால் எடுக்க முடிகள் நெரித்து, மனமொன்றி
உரையார் கீதம் பாடநல்ல உலப்பில் அருள் செய்தார்
திரையார் புனல்சூழ் செல்வ நறையூர்ச் சித்தீச்சரத்தாரே
(9)
நெடியான் பிரமன் நேடிக் காணார், நினைப்பார் மனத்தாராய்
அடியார் அவரும் அருமாமறையும் அண்டத்தமரரும்
முடியால் வணங்கிக் குணங்களேத்தி, முதல்வா அருளென்னச்
செடியார் செந்நெல் திகழும் நறையூர்ச் சித்தீச்சரத்தாரே
(10)
நின்றுண் சமணர், இருந்துண் தேரர், நீண்ட போர்வையார்
ஒன்றும் உணரா ஊமர் வாயிலுரை கேட்டு உழல்வீர்காள்
கன்றுண் பயப்பால் உண்ண முலையில் கபாலம் அயல்பொழியச்
சென்றுண்டு ஆர்ந்து சேரும் நறையூர்ச் சித்தீச்சரத்தாரே
(11)
குயிலார் கோல மாதவிகள் குளிர்பூஞ் சுர புன்னை
செயிலார் பொய்கை சேரும் நறையூர்ச் சித்தீச்சரத்தாரை
மயிலார் சோலை சூழ்ந்த காழிமல்கு சம்பந்தன்
பயில்வார்க்கினிய பாடல் வல்லார் பாவ நாசமே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page