(1)
நேரியனாகும் அல்லன், ஒருபாலும் மேனி அரியான், முனாய ஒளியான்
நீரியல் காலுமாகி, நிறை வானுமாகி, உறு தீயுமாய நிமலன்
ஊரியல் பிச்சை பேணி, உலகங்கள் ஏத்த நல்குண்டு, பண்டு சுடலை
நாரியொர் பாகமாக நடமாட வல்ல நறையூரின் நம்பன் அவனே
(2)
இட மயிலன்ன சாயல் மடமங்கை தன்கையெதிர் நாண்பூண வரையில்
கடும் அயிலம்பு கோத்து எயில் செற்றுகந்து அமரர்க்களித்த தலைவன்
மடமயில் ஊர்தி தாதை எனநின்று தொண்டர் மனம் நின்ற மைந்தன் மருவும்
நட மயிலால நீடு குயில்கூவு சோலை நறையூரின் நம்பன் அவனே
(3)
சூடக முன்கை மங்கை ஒருபாகமாக அருள் காரணங்கள் வருவான்
ஈடகமான நோக்கி இடுபிச்சை கொண்டு படு பிச்சனென்று பரவத்
தோடகமாய் ஒர் காதும், ஒருகாதிலங்கு குழை தாழ, வேழ உரியன்
நாடகமாக ஆடி மடவார்கள் பாடும் நறையூரின் நம்பன் அவனே
(4)
சாயனன், மாதொர் பாகன், விதியாய சோதி, கதியாக நின்ற கடவுள்
ஆயகம் என்னுள் வந்த அருளாய செல்வன், இருளாய கண்டன், அவனித்
தாயென நின்றுகந்த தலைவன், விரும்பு மலையின்கண் வந்து தொழுவார்
நாயகன் என்றிறைஞ்சி மறையோர்கள் பேணும் நறையூரின் நம்பன் அவனே
(5)
நெதிபடு மெய், எம் ஐயன், நிறைசோலை சுற்றி நிகழ்அம்பலத்தின் நடுவே
அதிர்பட ஆடவல்ல அமரர்க்கொருத்தன், எமர் சுற்றமாய இறைவன்
மதிபடு சென்னி மன்னு சடைதாழ வந்து விடையேறி இல்பலி கொள்வான்
நதிபட உந்திவந்து வயல்வாளை பாயும் நறையூரின் நம்பன் அவனே
(6)
கணிகையொர் சென்னிமன்னு மதுவன்னி கொன்றை மலர்துன்று செஞ் சடையினான்
பணிகையின் முன்னிலங்க வருவேடம் மன்னு பலவாகி நின்ற பரமன்
அணுகிய வேதஓசை அகலங்கம் ஆறின் பொருளான ஆதிஅருளான்
நணுகிய தொண்டர்கூடி மலர் தூவியேத்து நறையூரின் நம்பன் அவனே
(7)
ஒளிர் தருகின்ற மேனியுரு எங்கும் அங்கம்அவையார ஆடலரவம்
மிளிர்தரு கையிலங்க அனலேந்தி ஆடும் விகிர்தன், விடங்கொள் மிடறன்
துளிதரு சோலையாலை தொழில்மேவ, வேதம் எழிலார வென்றி அருளும்
நளிர்மதி சேருமாட மடவார்களாரும் நறையூரின் நம்பன் அவனே
(8)
அடல் எருதேறுகந்த அதிரும் கழல்கள், எதிரும் சிலம்பொடிசையக்
கடலிடை நஞ்சமுண்டு கனிவுற்ற கண்டன், முனிவுற்று இலங்கை அரையன்
உடலொடு தோளனைத்தும் முடிபத்திறுத்தும் இசைகேட்டிரங்கி, ஒருவாள்
நடலைகள் தீர்த்துநல்கி நமையாளவல்ல நறையூரின் நம்பன் அவனே
(9)
குலமலர் மேவினானும், மிகு மாயனாலும் எதிர்கூடி நேடி நினைவுற்று
இலபல எய்தொணாமை எரியாய் உயர்ந்த பெரியான் இலங்கு சடையன்
சிலபல தொண்டர்நின்று பெருமைக்கள் பேச, அருமைத் திகழ்ந்த பொழிலின்
நலமலர் சிந்தவாச மணநாறு வீதி நறையூரின் நம்பன் அவனே
(10)
துவர்உறுகின்ற ஆடை, உடல்போர்த்துழன்ற அவர்தாமும், அல்ல சமணும்
கவருறு சிந்தையாளர் உரை நீத்துகந்த பெருமான், பிறங்கு சடையன்
தவமலி பத்தர் சித்தர் மறையாளர் பேண முறைமாதர் பாடி மருவும்
நவமணி துன்றுகோயில் ஒளி பொன்செய் மாட நறையூரின் நம்பன் அவனே
(11)
கானலுலாவி ஓதம் எதிர்மல்கு காழிமிகு பந்தன் முந்தியுணர
ஞானமுலாவு சிந்தை அடிவைத்துகந்த நறையூரின் நம்பன் அவனை
ஈனமிலாத வண்ணம் இசையால் உரைத்த தமிழ்மாலை பத்து நினைவார்
வானநிலாவ வல்லர் நிலமெங்கு நின்று வழிபாடு செய்யும் மிகவே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...