திருநனிபள்ளி – சுந்தரர் தேவாரம்:

<– திருநனிபள்ளி

(1)
ஆதியன் ஆதிரையன், அயன்மால் அறிதற்கரிய
சோதியன், சொற்பொருளாய்ச் சுருங்கா மறை நான்கினையும்
ஓதியன், உம்பர் தங்கோன், உலகத்தினுள் எவ்வுயிர்க்கும்
நாதியன், நம்பெருமான் நண்ணும் ஊர் நனிபள்ளியதே
(2)
உறவிலி ஊனமிலி, உணரார் புரம் மூன்றெரியச்
செறுவிலி, தன்நினைவார் வினையாயின தேய்ந்தழிய
அறவிலகும் அருளான், மருளார் பொழில் வண்டறையும்
நறவிரி கொன்றையினான் நண்ணும் ஊர் நனிபள்ளியதே
(3)
வானுடையான், பெரியான்,  மனத்தாலும் நினைப்பரியான்
ஆனிடை ஐந்தமர்ந்தான், அணுவாகிஒர் தீயுருக்கொண்டு
ஊனுடை இவ்வுடலம் ஒடுங்கிப் புகுந்தான், பரந்தான்
நானுடை மாடுஎம்பிரான் நண்ணும் ஊர் நனிபள்ளியதே
(4)
ஓடுடையன் கலனா, உடை கோவணவன், உமையோர்
பாடுடையன், பலிதேர்ந்துணும் பண்புடையன், பயிலக்
காடுடையன், இடமா மலைஏழும் கருங்கடல்சூழ்
நாடுடை நம்பெருமான் நண்ணும் ஊர் நனிபள்ளியதே
(5)
பண்ணற்கு அரியதொரு படை ஆழிதனைப் படைத்துக்
கண்ணற்கருள் புரிந்தான், கருதாதவர் வேள்விஅவி
உண்ணற்கிமையவரை உருண்டோட உதைத்துகந்து
நண்ணற்கரிய பிரான் நண்ணும் ஊர் நனிபள்ளியதே
(6)
மல்கிய செஞ்சடைமேல் மதியும் அரவும் உடனே
புல்கிய ஆரணன்எம் புனிதன், புரிநூல் விகிர்தன்
மெல்கிய வில்தொழிலான் விருப்பன், பெரும் பார்த்தனுக்கு
நல்கிய நம்பெருமான் நண்ணும் ஊர் நனிபள்ளியதே
(7)
அங்கமொர் ஆறவையும், அருமாமறை வேள்விகளும்
எங்கும் இருந்து அந்தணர் எரிமூன்றவை ஓம்புமிடம்
பங்கய மாமுகத்தாள் உமைபங்கன் உறைகோயில்
செங்கயல் பாயும்வயல் திருவூர் நனிபள்ளியதே
(8)
திங்கள் குறுந்தெரியல் திகழ் கண்ணியன், நுண்ணியனாய்
நங்கள் பிணிகளைவான், அருமாமருந்து, ஏழ்பிறப்பும்
மங்கத், திருவிரலால் அடர்த்தான் வல்அரக்கனையும்
நங்கட்கருளும் பிரான் நண்ணும்ஊர் நனிபள்ளியதே
(9)
ஏன மருப்பினொடும், எழில் ஆமையும் பூண்டுகந்து
வான மதிளரணம் மலையே சிலையா வளைத்தான்
ஊனமில் காழிதன்னுள் உயர் ஞானசம்பந்தர்க்கன்று
ஞானம் அருள்புரிந்தான் நண்ணும்ஊர் நனிபள்ளியதே
(10)
காலமும் நாள்கழியும் நனிபள்ளி மனத்தில் உள்கிக்
கோலமதாயவனைக் குளிர்நாவல ஊரன் சொன்ன
மாலை மதித்துரைப்பார் மண்மறந்து வானோர்உலகில்
சாலநல் இன்பமெய்தித் தவலோகத்திருப்பவரே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page