திருநனிபள்ளி – சம்பந்தர் தேவாரம்:

<– திருநனிபள்ளி

(1)
காரைகள் கூகைமுல்லை களவாகை ஈகை படர்தொடரி கள்ளி கவினிச்
சூரைகள் பம்மிவிம்மு சுடுகாடமர்ந்த சிவன்மேய சோலை நகர்தான்
தேரைகள் ஆரைசாய மிதிகொள்ள, வாளை குதிகொள்ள, வள்ளை துவள
நாரைகள் ஆரல்வாரி வயல்மேதி வைகும் நனிபள்ளி போலும் நமர்காள்
(2)
சடையிடைப் புக்கொடுங்கி உளதங்கு வெள்ளம் வளர்திங்கள் கண்ணி அயலே
இடையிடை வைத்ததொக்கு மலர்தொத்து மாலை இறைவன் இடங்கொள் பதிதான்
மடையிடை வாளைபாய முகிழ்வாய் நெரிந்து மணநாறு நீலம் மலரும்
நடையுடை அன்னம்வைகு புனலம் படப்பை நனிபள்ளி போலும் நமர்காள்
(3)
பெறுமலர் கொண்டு தொண்டர் வழிபாடு செய்யல் ஒழிபாடிலாத பெருமான்
கறுமலர் கண்டமாக விடமுண்ட காளை இடமாய காதல் நகர்தான்
வெறுமலர் தொட்டுவிட்ட விசைபோன கொம்பின் விடுபோதலர்ந்த விரைசூழ்
நறுமலர் அல்லிபுல்லி ஒலிவண்டுறங்கு நனிபள்ளி போலும் நமர்காள்
(4)
குளிர்தரு கங்கைதங்கு சடைமாடிலங்கு, தலைமாலையோடு குலவி
ஒளிர்தரு திங்கள்சூடி, உமைபாகமாக உடையான் உகந்த நகர்தான்
குளிர்தரு கொம்மலோடு குயில்பாடல் கேட்ட பெடைவண்டு தானும் முரல
நளிர்தரு சோலைமாலை நரைகுருகு வைகு நனிபள்ளி போலும் நமர்காள்
(5)
தோடொரு காதனாகி, ஒருகாதிலங்கு சுரிசங்கு நின்று புரளக்
காடிடமாக நின்று கனலாடும் எந்தை இடமாய காதல் நகர்தான்
வீடுடன் எய்துவார்கள் விதியென்று சென்று வெறிநீர் தெளிப்ப விரலால்
நாடுடனாடு செம்மை ஒலிவெள்ளமாரும் நனிபள்ளி போலும் நமர்காள்
(6)
மேகமொடோடு திங்கள் மலரா அணிந்து, மலையான் மடந்தை மணிபொன்
ஆகமொர் பாகமாக, அனலாடும் எந்தை பெருமான் அமர்ந்த நகர்தான்
ஊகமொடாடு மந்தி உகளும் சிலம்ப, அகிலுந்தி ஒண்பொன் இடறி
நாகமொடாரம் வாரு புனல் வந்தலைக்கும் நனிபள்ளி போலும் நமர்காள்
(7)
தகைமலி தண்டுசூலம் அனலுமிழும் நாகம் கொடுகொட்டிவீணை முரல
வகைமலி வன்னிகொன்றை மதமத்தம் வைத்த பெருமான் உகந்த நகர்தான்
புகைமலி கந்தமாலை புனைவார்கள் பூசல் பணிவார்கள் பாடல் பெருகி
நகைமலி முத்திலங்கு மணல்சூழ் கிடக்கை நனிபள்ளி போலும் நமர்காள்
(8)
வலமிகு வாளன் வேலன் வளைவாள் எயிற்று மதியா அரக்கன் வலியோடு
உலமிகு தோள்கள்ஒல்க விரலால்அடர்த்த பெருமான் உகந்த நகர்தான்
நிலமிகு கீழுமேலும் நிகராதுமில்லை எனநின்ற நீதியதனை
நலமிகு தொண்டர்நாளும் அடிபரவல் செய்யும் நனிபள்ளி போலும் நமர்காள்
(9)
நிறவுரு ஒன்றுதோன்றி எரியொன்றி நின்றதொரு நீர்மை சீர்மை நினையார்
அறவுரு வேதநாவன் அயனோடுமாலும் அறியாத அண்ணல் நகர்தான்
புறவிரி முல்லை மௌவல் குளிர்பிண்டி புன்னை புனைகொன்றை துன்று பொதுளி
நறவிரி போதுதாது புதுவாச நாறும் நனிபள்ளி போலும் நமர்காள்
(10)
அனமிகு செல்குசோறு கொணர்கென்று கையில் இடவுண்டு பட்ட அமணும்
மனமிகு கஞ்சிமண்டை அதிலுண்டு தொண்டர் குணமின்றி நின்ற வடிவும்
வினைமிகு வேதநான்கும் விரிவித்த நாவின் விடையான் உகந்த நகர்தான்
நனமிகு தொண்டர்நாளும் அடிபரவல் செய்யும் நனிபள்ளி போலும் நமர்காள்
(11)
கடல்வரை ஓதமல்கு கழிகானல் பானல் கமழ்காழி என்று கருதப்
படுபொருள் ஆறுநாலும் உளதாக வைத்த பதியான ஞான முனிவன்
இடுபறை ஒன்தவத்தர் பியன்மேல் இருந்து இசையாலுரைத்த பனுவல்
நடுஇருளாடும் எந்தை நனிபள்ளி உள்க வினை கெடுதல் ஆணை நமதே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page