திருத்தேவூர் – சம்பந்தர் தேவாரம் (1):

<– திருத்தேவூர்

(1)
மொழி உமைபங்கன், எம்பெருமான்
விண்ணில் வானவர் கோன், விமலன், விடையூர்தி
தெண்ணிலா மதி தவழ்தரு மாளிகைத் தேவூர்
அண்ணல் சேவடி அடைந்தனம் அல்லல் ஒன்றிலமே
(2)
ஓதி மண்டலத்தோர் முழுதுய்ய வெற்பேறு
சோதி வானவன், துதிசெய மகிழ்ந்தவன், தூநீர்த்
தீதில் பங்கயம் தெரிவையர் முகமலர் தேவூர்
ஆதிசேவடி அடைந்தனம் அல்லல் ஒன்றிலமே
(3)
மறைகளால் மிகவழிபடு மாணியைக் கொல்வான்
கறுவு கொண்ட அக்காலனைக் காய்ந்த வெங்கடவுள்
செறுவில் வாளைகள் சேலவை பொருவயல் தேவூர்
அறவன் சேவடி அடைந்தனம் அல்லல் ஒன்றிலமே
(4)
முத்தன், சில்பலிக்கு ஊர்தொறும் முறைமுறை திரியும்
பித்தன், செஞ்சடைப் பிஞ்ஞகன், தன்அடியார்கள்
சித்தன், மாளிகை செழுமதி தவழ்பொழில் தேவூர்
அத்தன் சேவடி அடைந்தனம் அல்லல் ஒன்றிலமே
(5)
பாடுவார் இசை, பல்பொருள் பயனுகந்தன்பால்
கூடுவார், துணைக் கொண்ட தம் பற்றறப் பற்றித்
தேடுவார் பொருளானவன், செறிபொழில் தேவூர்
ஆடுவான் அடி அடைந்தனம் அல்லல் ஒன்றிலமே
(6)
பொங்கு பூண்முலைப் புரிகுழல் வரிவளைப் பொருப்பின்
மங்கை பங்கினன், கங்கையை வளர்சடை வைத்தான்
திங்கள் சூடிய தீநிறக் கடவுள், தென் தேவூர்
அங்கணன் தனை அடைந்தனம் அல்லல் ஒன்றிலமே
(7)
வல்புயத்த அத்தானவர் புரங்களை எரியத்
தன் புயத்துறத் தடவரை வளைத்தவன், தக்க
தென்தமிழ்க் கலை தெரிந்தவர், பொருந்திய தேவூர்
அன்பன் சேவடி அடைந்தனம் அல்லல் ஒன்றிலமே
(8)
தருவுயர்ந்த வெற்பெடுத்தஅத் தசமுகன் எரிந்து
வெருவ ஊன்றிய திருவிரல் நெகிழ்த்து வாள் பணித்தான்
தெருவு தோறும்நல் தென்றல் வந்துலவிய தேவூர்
அரவு சூடியை அடைந்தனம் அல்லல் ஒன்றிலமே
(9)
முந்திக் கண்ணனும் நான்முகனும் அவர் காணா
எந்தை, திண்திறல் இருங்களிறுரித்த எம்பெருமான்
செந்தினத்திசை அறுபதம்முரல் திருத்தேவூர்
அந்தி வண்ணனை அடைந்தனம் அல்லல் ஒன்றிலமே
(10)
பாறு புத்தரும் தவமணி சமணரும் பலநாள்
கூறி வைத்ததோர் குறியினைப் பிழையெனக் கொண்டு
தேறி மிக்கநம் செஞ்சடைக் கடவுள் தென்தேவூர்
ஆறுசூடியை அடைந்தனம் அல்லல் ஒன்றிலமே
(11)
அல்லலின்றி விண்ணாள்வர்கள் காழியர்க்கதிபன்
நல்ல செந்தமிழ் வல்லவன் ஞானசம்பந்தன்
எல்லையில்புகழ் மல்கிய எழில்வளர் தேவூர்த்
தொல்லை நம்பனைச் சொல்லிய பத்தும் வல்லாரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page