திருத்தெங்கூர்:

<– சோழ நாடு (காவிரி தென்கரை)

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(சம்பந்தர் தேவாரம்):

(1)
புரைசெய் வல்வினை தீர்க்கும் புண்ணியர், விண்ணவர் போற்றக்
கரைசெய் மால்கடல் நஞ்சை உண்டவர், கருதலர் புரங்கள்
இரைசெய்தார் ஆரழல் ஊட்டி, உழல்பவர் இடுபலிக்கு, எழில்சேர்
விரைசெய் பூம்பொழில் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந்தாரே
(2)
சித்தம் தன்னடி நினைவார் செடிபடு கொடுவினை தீர்க்கும்
கொத்தின் தாழ்சடை முடிமேல் கோளெயிற்றரவொடு பிறையன்
பத்தர் தாம் பணிந்தேத்தும் பரம்பரன், பைம்புனல் பதித்த
வித்தன், தாழ்பொழில் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந்தாரே
(3)
அடையும் வல்வினை அகல அருள்பவர், அனலுடை மழுவாள்
படையர், பாய்புலித் தோலர், பைம்புனல் கொன்றையர், படர்புன்
சடையில் வெண்பிறை சூடித் தார்மணி அணிதரு தறுகண்
விடையர், வீங்கெழில் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந்தாரே
(4)
பண்டு நான்செய்த வினைகள் பறையவோர் நெறியருள் பயப்பார்
கொண்டல் வான்மதி சூடிக் குரைகடல் விடமணி கண்டர்
வண்டு மாமலர்ஊதி மதுவுண இதழ் மறிவெய்தி
விண்ட வார்பொழில் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந்தாரே
(5)
சுழித்த வார்புனல் கங்கை சூடியொர் காலனைக் காலால்
தெழித்து வானவர் நடுங்கச் செற்றவர்; சிறையணி பறவை
கழித்த வெண்தலை ஏந்திக் காமனதுடல் பொடியாக
விழித்தவர், திருத்தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந்தாரே
(6)
தொல்லை வல்வினை தீர்ப்பார், சுடலைவெண் பொடியணி சுவண்டர்
எல்லி சூடி நின்றாடும் இறையவர், இமையவர் ஏத்தச்
சில்லை மால்விடையேறித் திரிபுரம் தீயெழச் செற்ற
வில்லினார், திருத்தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந்தாரே
(7)
நெறிகொள் சிந்தையராகி நினைபவர், வினைகெட நின்றார்
முறிகொள் மேனி முக்கண்ணர், முளைமதி நடுநடுத்திலங்கப்
பொறிகொள் வாளரவணிந்த புண்ணியர், வெண்பொடிப் பூசி
வெறிகொள் பூம்பொழில் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந்தாரே
(8)
எண்ணிலா விறல்அரக்கன் எழில்திகழ் மால்வரை எடுக்கக்
கண்ணெலாம் பொடிந்தலறக் கால்விரலால் ஊன்றிய கருத்தர்
தண்ணுலாம் புனல் கண்ணி தயங்கிய சடைமுடிச் சதுரர்
விண்ணுலாம் பொழில் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந்தாரே
(9)
தேடித்தான் அயன்மாலும் திருமுடி அடியிணை காணார்
பாடத்தான்பல பூதப் படையினர், சுடலையில் பலகால்
ஆடத்தான் மிக வல்லர், அருச்சுனற்கருள் செயக் கருதும்
வேடத்தார், திருத்தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந்தாரே
(10)
சடங்கொள் சீவரப் போர்வைச் சாக்கியர் சமணர்சொல் தவிர
இடங்கொள் வல்வினை தீர்க்கும் ஏத்துமின் இருமருப்பொரு கைக்
கடங்கொண் மால் களிற்றுரியர், கடல் கடைந்திடக் கனன்றெழுந்த
விடங்கொள் கண்டத்தர், தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந்தாரே
(11)
வெந்த நீற்றினர், தெங்கூர் வெள்ளியம் குன்றமர்ந்தாரைக்
கந்தமார் பொழில் சூழ்ந்த காழியுண் ஞானசம்பந்தன்
சந்தமாயின பாடல் தண்தமிழ் பத்தும் வல்லார்மேல்
பந்தமாயின பாவம் பாறுதல் தேறுதல் பயனே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page