திருத்தூங்கானைமாடம் – சம்பந்தர் தேவாரம்:

<– திருத்தூங்கானைமாடம்

(1)
ஒடுங்கும் பிணிபிறவி கேடென்றிவை உடைத்தாய வாழ்க்கை ஒழியத்தவம்
அடங்கும் இடங்கருதி நின்றீரெல்லாம் அடிகள் அடிநிழல்கீழ் ஆளாம்வண்ணம்
கிடங்கும் மதிலும் சுலாவியெங்கும் கெழுமனைகள் தோறும்  மறையின்ஒலி
தொடங்கும் கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானைமாடம் தொழுமின்களே
(2)
பிணிநீர சாதல் பிறத்தல்இவை பிரியப், பிரியாத பேரின்பத்தோடு
அணிநீர மேலுலகம் எய்தலுறில் அறிமின் குறைவில்லை, ஆனேறுடை
மணிநீல கண்டமுடைய பிரான் மலைமகளும் தானும் மகிழ்ந்து வாழும்
துணிநீர்க் கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானைமாடம் தொழுமின்களே
(3)
சாநாளும் வாழ்நாளும் தோற்றமிவை சலிப்பாய வாழ்க்கை ஒழியத்தவம்
ஆமாறறியாது அலமந்துநீர் அயர்ந்தும் குறைவில்லை, ஆனேறுடைப்
பூமாணலங்கல் இலங்கு கொன்றை புனல்பொதிந்த புன்சடையினான் உறையும்
தூமாண் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானைமாடம் தொழுமின்களே
(4)
ஊன்றும் பிணிபிறவி கேடென்றிவை உடைத்தாய வாழ்க்கை ஒழியத் தவம்
மான்று மனம்கருதி நின்றீரெல்லாம் மனந்திரிந்து மண்ணில் மயங்காதுநீர்
மூன்று மதிலெய்த மூவாச்சிலை முதல்வர்க்கிடம்போலும் முகில்தோய் கொடி
தோன்றும் கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானைமாடம் தொழுமின்களே
(5)
மயல்நீர்மை இல்லாத தோற்றம் இவை மரணத்தொடு ஒத்தழியுமாறாதலால்
வியல்தீர மேலுலகம் எய்தலுறின் மிக்கொன்றும் வேண்டா விமலன்இடம்
உயர்தீர ஓங்கிய நாமங்களால் ஓவாது நாளும் அடிபரவல் செய்
துயர்தீர் கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானைமாடம் தொழுமின்களே
(6)
பல்நீர்மை குன்றிச் செவிகேட்பிலா படர்நோக்கின்கண் பவளந்நிற
நல்நீர்மை குன்றித் திரைதோலொடு நரைதோன்றும் காலம் நமக்காதல் முன்
பொன்நீர்மை துன்றப் புறந்தோன்று நற்புனல் பொதிந்த புன்சடையினான் உறையும்
தொன்னீர்க் கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே
(7)
இறையூண் துகளோடு இடுக்கண்எய்தி இழிப்பாய வாழ்க்கை ஒழியத்தவம்
நிறையூண் நெறிகருதி நின்றீரெல்லாம், நீள்கழலே நாளும் நினைமின் சென்னிப்
பிறைசூழலங்கல் இலங்கு கொன்றை பிணையும் பெருமான் பிரியாத நீர்த்
துறைசூழ் கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே
(8)
பல்வீழ்ந்து நாத்தளர்ந்து மெய்யில் வாடிப் பழிப்பாய வாழ்க்கை ஒழியத்தவம்
இல்சூழிடம் கருதி நின்றீரெல்லாம் இறையே பிரியாது எழுந்து போதும்
கல்சூழ் அரக்கன் கதறச் செய்தான் காதலியும் தானும் கருதிவாழும்
தொல்சீர்க் கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானைமாடம் தொழுமின்களே
(9)
நோயும் பிணியும் அருந்துயரமும் நுகருடைய வாழ்க்கை ஒழியத்தவம்
வாயு மனம் கருதி நின்றீர் எல்லாம், மலர்மிசைய நான்முகனும் மண்ணும் விண்ணும்
தாய அடியளந்தான் காணமாட்டாத் தலைவர்க்கிடம்போலும், தண்சோலை விண்
தோயும் கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானைமாடம் தொழுமின்களே
(10)
பகடூர் பசிநலிய நோய்வருதலால் பழிப்பாய வாழ்க்கை ஒழியத்தவம்
முகடூர் மயிர்கடிந்த செய்கையாரும், மூடுதுவர் ஆடையரும் நாடிச்சொன்ன
திகழ்தீர்ந்த பொய்ம்மொழிகள் தேறவேண்டா, திருந்திழையும் தானும் பொருந்தி வாழும்
துகள்தீர் கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானைமாடம் தொழுமின்களே.
(11)
மண்ணார் முழவதிரு மாடவீதி வயற்காழி ஞானசம்பந்தன், நல்ல
பெண்ணாகடத்துப் பெருங்கோயில் சேர் பிறையுரிஞ்சும் தூங்கானைமாட மேயான்
கண்ணார் கழல்பரவு பாடல் பத்தும் கருத்துணரக் கற்றாரும் கேட்டாரும் போய்
விண்ணோர் உலகத்து மேவிவாழும் விதி அதுவேயாகும் வினைமாயுமே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page