(1)
அழல்நீர் ஒழுகி அனைய சடையும்
உழையீர் உரியும் உடையான் இடமாம்
கழைநீர் முத்தும் கனகக் குவையும்
சுழல்நீர்ப் பொன்னிச் சோற்றுத்துறையே
(2)
பண்டை வினைகள் பறிய நின்ற
அண்ட முதல்வன் அமலன் இடமாம்
இண்டை கொண்டுஅன்பு இடைஅறாத
தொண்டர் பரவும் சோற்றுத்துறையே
(3)
கோல அரவும் கொக்கின் இறகும்
மாலை மதியும் வைத்தான் இடமாம்
ஆலும் மயிலும் ஆடல் அளியும்
சோலை தருநீர்ச் சோற்றுத்துறையே
(4)
பளிக்குத் தாரை பவள வெற்பில்
குளிக்கும் போல்நூல் கோமாற்கிடமாம்
அளிக்கும் ஆத்தி அல்லால் மதுவம்
துளிக்கும் சோலைச் சோற்றுத்துறையே
(5)
உதையும் கூற்றுக்கொல்கா விதிக்கு
வதையும் செய்த மைந்தன் இடமாம்
திதையும் தாதும் தேனும் ஞிமிறும்
துதையும் பொன்னிச் சோற்றுத்துறையே
(6)
ஓதக் கடல் நஞ்சினை உண்டிட்ட
பேதைப் பெருமான் பேணும் பதியாம்
சீதப் புனல் உண்டெரியைக் காலும்
சூதப் பொழில்சூழ் சோற்றுத்துறையே
(7)
இறந்தார் என்பும் எருக்கும் சூடிப்
புறங்காட்டாடும் புனிதன் கோயில்
சிறந்தார் சுற்றம் திருஎன்றின்ன
துறந்தார் சேரும் சோற்றுத்துறையே
(8)
காமன் பொடியாக் கண் ஒன்றிமைத்த
ஓமக் கடலார் உகந்த இடமாம்
தேமென் குழலார் சேக்கை புகைத்த
தூமம் விசும்பார் சோற்றுத்துறையே
(9)
இலையால் அன்பால் ஏத்தும் அவர்க்கு
நிலையா வாழ்வை நீத்தார் இடமாம்
தலையால் தாழும் தவத்தோர்க்கென்றும்
தொலையாச் செல்வச் சோற்றுத்துறையே
(10)
சுற்றார் தருநீர்ச் சோற்றுத்துறையுள்
முற்றா மதிசேர் முதல்வன் பாதத்து
அற்றார் அடியார் அடிநாய் ஊரன்
சொற்றான் இவைகற்றார் துன்பிலரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...