திருச்சோற்றுத்துறை – சம்பந்தர் தேவாரம்:

<– திருச்சோற்றுத்துறை

(1)
செப்ப நெஞ்சே நெறிகொள் சிற்றின்பம்
துப்பன் என்னாது அருளே துணையாக
ஒப்பரொப்பர் பெருமான் ஒளிவெண்ணீற்று
அப்பர் சோற்றுத்துறை சென்றடைவோமே
(2)
பாலு நெய்யும் தயிரும் பயின்றாடித்
தோலும் நூலும் துதைந்த வரைமார்பர்
மாலும் சோலை புடைசூழ் மடமஞ்ஞை
ஆலும் சோற்றுத்துறை சென்றடைவோமே
(3)
செய்யர்; செய்ய சடையர்; விடையூர்வர்
கைகொள் வேலர்; கழலர்; கரிகாடர்
தையலாளொர் பாகமாய எம்
ஐயர் சோற்றுத்துறை சென்றடைவோமே
(4)
பிணிகொள் ஆக்கை ஒழியப் பிறப்புளீர்
துணிகொள் போரார், துளங்கு மழுவாளர்
மணிகொள் கண்டர் மேய வார்பொழில்
அணிகொள் சோற்றுத்துறை சென்றடைவோமே
(5)
பிறையும் அரவும் புனலும் சடைவைத்து
மறையும்ஓதி, மயானம் இடமாக
உறையும் செல்வம் உடையார், காவிரி
அறையும் சோற்றுத்துறை சென்றடைவோமே
(6)
துடிகளோடு முழவம் விம்மவே
பொடிகள் பூசிப் புறங்காடு அரங்காகப்
படிகொள் பாணி பாடல் பயின்றாடும்
அடிகள் சோற்றுத்துறை சென்றடைவோமே
(7)
சாடிக் காலன் மாளத் தலைமாலை
சூடி மிக்குச் சுவண்டாய் வருவார்தாம்
பாடியாடிப் பரவுவார் உள்ளத்து
ஆடி சோற்றுத்துறை சென்றடைவோமே
(8)
பெண்ணோர் பாகமுடையார், பிறைச்சென்னிக்
கண்ணோர் பாகம் கலந்த நுதலினார்
எண்ணாது அரக்கன் எடுக்க ஊன்றிய
அண்ணல் சோற்றுத்துறை சென்றடைவோமே
(9)
தொழுவார் இருவர் துயர நீங்கவே
அழலாய் ஓங்கி அருள்கள் செய்தவன்
விழவார் மறுகில் விதியான் மிக்கஎம்
எழிலார் சோற்றுத்துறை சென்றடைவோமே
(10)
கோது சாற்றித் திரிவார் அமண்குண்டர்
ஓதும் ஓத்தை உணராதெழு நெஞ்சே
நீதி நின்று நினைவார் வேடமாம்
ஆதி சோற்றுத்துறை சென்றடைவோமே
(11)
அந்தண் சோற்றுத்துறைஎம் ஆதியைச்
சிந்தை செய்ம்மின் அடியார் ஆயினீர்
சந்தம் பரவு ஞானசம்பந்தன்
வந்தவாறே புனைதல் வழிபாடே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page