(1)
பொய்விரா மேனி தன்னைப் பொருளெனக் காலம் போக்கி
மெய்விரா மனத்தன் அல்லேன், வேதியா வேதநாவா
ஐவரால் அலைக்கப்பட்ட ஆக்கை கொண்டயர்த்துப் போனேன்
செய்வரால் உகளும் செம்மைத் திருச்சோற்றுத் துறையனாரே
(2)
கட்டராய் நின்று நீங்கள் காலத்தைக் கழிக்க வேண்டா
எட்டவாம் கைகள் வீசி எல்லி நின்றாடுவானை
அட்டகா மலர்கள் கொண்டே ஆனஞ்சும் ஆட்ட ஆடிச்
சிட்டராய் அருள்கள் செய்வார் திருச்சோற்றுத் துறையனாரே
(3)
கல்லினால் புரமூன்றெய்த கடவுளைக் காதலாலே
எல்லியும் பகலும்உள்ளே ஏகாந்தமாக ஏத்தும்
பல்லில் வெண்தலை கையேந்திப் பல்இலம் திரியும் செல்வர்
சொல்லுநன் பொருளுமாவார் திருச்சோற்றுத் துறையனாரே
(4)
கறையராய்க் கண்ட நெற்றிக் கண்ணராய்ப் பெண்ணோர் பாகம்
இறையராய் இனியராகித், தனியராய்ப் பனிவெண்திங்கள்
பிறையராய்ச் செய்த எல்லாம், பீடராய்க் கேடில் சோற்றுத்
துறையராய்ப் புகுந்தென் உள்ளச் சோர்வு கண்டருளினாரே
(5)
பொந்தையைப் பொருளா எண்ணிப் பொருக்கெனக் காலம் போனேன்
எந்தையே ஏகமூர்த்தி என்று நின்றேத்த மாட்டேன்
பந்தமாய் வீடுமாகிப் பரம்பரமாகி நின்று
சிந்தையுள் தேறல் போலும் திருச்சோற்றுத் துறையனாரே
(6)
பேர்த்தினிப் பிறவா வண்ணம் பிதற்றுமின் பேதை பங்கன்
பார்த்தனுக்கருள்கள் செய்த பாசுபதன் திறமே
ஆர்த்து வந்திழிவதொத்த அலைபுனல் கங்கையேற்றுத்
தீர்த்தமாய்ப் போத விட்டார் திருச்சோற்றுத் துறையனாரே
(7)
கொந்தார்பூங் குழலினாரைக் கூறியே காலம் போன
எந்தைஎம் பிரானாய் நின்ற இறைவனை ஏத்தாதந்தோ
முந்தரா அல்குலாளை உடன்வைத்த ஆதி மூர்த்தி
செந்தாது புடைகள் சூழ்ந்த திருச்சோற்றுத் துறையனாரே
(8)
அங்கதிரோன் ஆனவனை அண்ணலாக் கருத வேண்டா
வெங்கதிரோன் வழியே போவதற்கமைந்து கொள்மின்
அங்கதிரோன் ஆனவனை உடன்வைத்த ஆதி மூர்த்தி
செங்கதிரோன் வணங்கும் திருச்சோற்றுத் துறையனாரே
(9)
ஓதியே கழிக்கின்றீர்கள் உலகத்தீர் ஒருவன் தன்னை
நீதியால் நினைய மாட்டீர் நின்மலன் என்று சொல்லீர்
சாதியா நான்முகனும் சக்கரத்தானும் காணாச்
சோதியாய்ச் சுடரதானார் திருச்சோற்றுத் துறையனாரே
(10)
மற்றுநீர் மனம் வையாதே மறுமையைக் கழிக்க வேண்டில்
பெற்றதோர் உபாயம் தன்னால் பிரானையே பிதற்றுமின்கள்
கற்று வந்த அரக்கன்ஓடிக் கயிலாய மலையெடுக்கச்
செற்றுகந்தருளிச் செய்தார் திருச்சோற்றுத் துறையனாரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...