திருச்சோற்றுத்துறை – அப்பர் தேவாரம் (3):

<– திருச்சோற்றுத்துறை

(1)
கொல்லை ஏற்றினர் கோளரவத்தினர்
தில்லைச் சிற்றம்பலத்துறை செல்வனார்
தொல்லை ஊழியர் சோற்றுத் துறையர்க்கே
வல்லையாய்ப் பணிசெய் மட நெஞ்சமே
(2)
முத்தியாக ஒருதவம் செய்திலை
அத்தியால் அடியார்க்கொறளித்திலை
தொத்து நின்றலர் சோற்றுத்துறையர்க்கே
பத்தியாய்ப் பணிசெய் மட நெஞ்சமே
(3)
ஒட்டி நின்ற உடலுறு நோய்வினை
கட்டி நின்ற கழிந்தவை போயறத்
தொட்டு நின்றும் அச்சோற்றுத் துறையர்க்கே
பட்டியாப் பணிசெய் மட நெஞ்சமே
(4)
ஆதியான், அண்டவாணர்க்குருள் நல்கு
நீதியான் என்றும், நின்மலனே என்றும்
சோதியான் என்றும், சோற்றுத்துறையர்க்கே
வாதியாய்ப் பணிசெய் மட நெஞ்சமே
(5)
ஆட்டினாய், அடியேன் வினையாயின
ஓட்டினாய், ஒரு காதில் இலங்குவெண்
தோட்டினாய், என்று சோற்றுத்துறையர்க்கே
நீட்டிநீ பணிசெய் மட நெஞ்சமே
(6)
பொங்கி நின்றெழுந்த கடல் நஞ்சினைப்
பங்கி உண்டதோர் தெய்வமுண்டோ சொலாய்
தொங்கி நீயென்றும் சோற்றுத்துறையர்க்குத்
தங்கிநீ பணிசெய் மட நெஞ்சமே
(7)
ஆணி போலநீ ஆற்ற வலியை காண்
ஏணி போல் இழிந்தேறியும் ஏங்கியும்
தோணியாகிய சோற்றுத்துறையர்க்கே
பூணியாய்ப் பணிசெய் மட நெஞ்சமே
(8)
பெற்றம் ஏறிலென், பேய் படையாகிலென்
புற்றில் ஆடரவே அது பூணிலென்
சுற்றிநீ என்றும் சோற்றுத்துறையர்க்கே
பற்றிநீ பணிசெய் மட நெஞ்சமே
(9)
அல்லியான், அரவைந்தலை நாகணைப்
பள்ளியான் அறியாத பரிசெலாம்
சொல்லி நீஎன்றும் சோற்றுத்துறையர்க்கே
புல்லிநீ பணிசெய் மட நெஞ்சமே
(10)
மிண்டரோடு விரவியும் வீறிலாக்
குண்டர் தம்மைக் கழிந்துய்யப் போந்துநீ
தொண்டு செய்தென்றும் சோற்றுத்துறையர்க்கே
உண்டுநீ பணிசெய் மட நெஞ்சமே
(11)
வாழ்ந்தவன் வலி வாளரக்கன் தனை
ஆழ்ந்து போயலறவ் விரலூன்றினான்
சூழ்ந்த பாரிடம் சோற்றுத்துறையர்க்குத்
தாழ்ந்துநீ பணிசெய் மட நெஞ்சமே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page