திருச்சோற்றுத்துறை – அப்பர் தேவாரம் (4):

<– திருச்சோற்றுத்துறை

(1)
மூத்தவனாய் உலகுக்கு முந்தினானே
    முறைமையால் எல்லாம் படைக்கின்றானே
ஏத்தவனாய் ஏழுலகும் ஆயினானே
    இன்பனாய்த் துன்பம் களைகின்றானே
காத்தவனாய் எல்லாம்தான் காண்கின்றானே
    கடுவினையேன் தீவினையைக் கண்டு போகத்
தீர்த்தவனே, திருச்சோற்றுத் துறையுளானே
    திகழொளியே சிவனேஉன் அபயம் நானே
(2)
தலையவனாய் உலகுக்கோர் தன்மையானே
    தத்துவனாய்ச் சார்ந்தார்க்கின்னமுது ஆனானே
நிலையவனாய் நின்னொப்பார் இல்லாதானே
    நின்றுணராக் கூற்றத்தைச் சீறிப் பாய்ந்த
கொலையவனே கொல்யானைத் தோல்மேலிட்ட
    கூற்றுவனே, கொடிமதில்கள் மூன்றும்எய்த
சிலையவனே, திருச்சோற்றுத் துறையுளானே
    திகழொளியே சிவனேஉன் அபயம் நானே
(3)
முற்றாத பால்மதியம் சூடினானே
    முளைத்தெழுந்த கற்பகத்தின் கொழுந்தொப்பானே
உற்றாரென்றொருவரையும் இல்லாதானே
    உலகோம்பும் ஒண்சுடரே ஓதும் வேதம்
கற்றானே எல்லாக் கலைஞானமும்
    கல்லாதேன் தீவினைநோய் கண்டு போகச்
செற்றானே, திருச்சோற்றுத் துறையுளானே
    திகழொளியே சிவனேஉன் அபயம் நானே
(4)
கண்ணவனாய் உலகெல்லாம் காக்கின்றானே
    காலங்கள் ஊழி கண்டிருக்கின்றானே
விண்ணவனாய் விண்ணவர்க்கும் அருள் செய்வானே
    வேதனாய் வேதம் விரித்திட்டானே
எண்ணவனாய் எண்ணார் புரங்கள் மூன்றும்
    இமையாமுன் எரிகொளுவ நோக்கி நக்க
திண்ணவனே திருச்சோற்றுத் துறையுளானே
    திகழொளியே சிவனேஉன் அபயம் நானே
(5)
நம்பனே நான்மறைகள் ஆயினானே
    நடமாட வல்லானே ஞானக் கூத்தா
கம்பனே கச்சிமா நகருளானே
    கடிமதில்கள் மூன்றினையும் பொடியா எய்த
அம்பனே அளவிலாப் பெருமையானே
    அடியார்கட்காரமுதே, ஆனேறேறும்
செம்பொனே திருச்சோற்றுத் துறையுளானே
    திகழொளியே சிவனேஉன் அபயம் நானே
(6)
ஆர்ந்தவனே, உலகெலாம் நீயேயாகி
    அமைந்தவனே, அளவிலாப் பெருமையானே
கூர்ந்தவனே, குற்றாலம் மேய கூத்தா
    கொடு மூவிலையதோர் சூலமேந்திப்
பேர்ந்தவனே, பிரளயங்கள் எல்லாமாய
    பெம்மான் என்றெப்போதும் பேசும் நெஞ்சில்
சேர்ந்தவனே, திருச்சோற்றுத் துறையுளானே
    திகழொளியே சிவனேஉன் அபயம் நானே
(7)
வானவனாய் வண்மை மனத்தினானே
    மாமணிசேர் வானோர் பெருமான் நீயே
கானவனாய் ஏனத்தின் பின்சென்றானே
    கடிய அரணங்கள் மூன்றட்டானே
தானவனாய்த் தண்கயிலை மேவினானே
    தன்னொப்பார் இல்லாத மங்கைக்கென்றும்
தேனவனே, திருச்சோற்றுத் துறையுளானே
    திகழொளியே சிவனேஉன் அபயம் நானே
(8)
தன்னவனாய் உலகெல்லாம் தானேயாகித்
    தத்துவனாய்ச் சார்ந்தார்க்கு இன்னமுதானானே
என்னவனாய் என்இதயம் மேவினானே
    ஈசனே, பாச வினைகள் தீர்க்கும்
மன்னவனே, மலைமங்கை பாகமாக
    வைத்தவனே, வானோர் வணங்கும் பொன்னித்
தென்னவனே, திருச்சோற்றுத் துறையுளானே
    திகழொளியே சிவனேஉன் அபயம் நானே
(9)
எறிந்தானே எண்திசைக்கும் கண்ணானானே
    ஏழுலகமெல்லா முன்னாய் நின்றானே
அறிந்தார்தாம் ஓரிருவர் அறியா வண்ணம்
    ஆதியும் அந்தமுமாகி அங்கே
பிறிந்தானே பிறரொருவர் அறியா வண்ணம்
    பெம்மான் என்றெப்போதும் ஏத்து நெஞ்சில்
செறிந்தானே, திருச்சோற்றுத் துறையுளானே
    திகழொளியே சிவனேஉன் அபயம் நானே
(10)
மையனைய கண்டத்தாய், மாலும் மற்றை
    வானவரும் அறியாத வண்ணச் சூலக்
கையவனே, கடியிலங்கைக் கோனை அன்று
    கால்விரலால் கதிர்முடியும் தோளும் செற்ற
மெய்யவனே, அடியார்கள் வேண்டிற்றீயும்
    விண்ணவனே, விண்ணப்பம் கேட்டு நல்கும்
செய்யவனே, திருச்சோற்றுத் துறையுளானே
    திகழொளியே சிவனேஉன் அபயம் நானே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page