திருச்சேறை – சம்பந்தர் தேவாரம்:

<– திருச்சேறை

(1)
முறியுறு நிறமல்கு முகிழ்முலை மலைமகள் வெருவமுன்
வெறியுறு மதகரி அதள்பட உரிசெய்த விறலினர்
நறியுறும் இதழியின் மலரொடு நதிமதி நகுதலை
செறியுறு சடைமுடி அடிகள்தம் வளநகர் சேறையே
(2)
புனமுடை நறுமலர் பலகொடு தொழுவதொர் புரிவினர்
மனமுடை அடியவர் படுதுயர் களைவதொர் வாய்மையர்
இனமுடை மணியினொடரசிலை ஒளிபெற மிளிர்வதோர்
சினமுதிர் விடையுடை அடிகள்தம் வளநகர் சேறையே
(3)
புரிதரு சடையினர், புலியதள் அரையினர், பொடிபுல்கும்
எரிதரும் உருவினர், இடபமதேறுவர், ஈடுலா
வரிதரு வளையினர், அவரவர் மகிழ்தர மனைதொறும்
திரிதரு சரிதையர், உறைதரு வளநகர் சேறையே
(4)
துடிபடும் இடையுடை மடவரல் உடனொரு பாகமா
இடிபடு குரலுடை விடையினர், படமுடை அரவினர்
பொடிபடும் உருவினர், புலியுரி பொலிதரும் அரையினர்
செடிபடு சடைமுடி அடிகள்தம் வளநகர் சேறையே
(5)
அந்தரம் உழிதரு திரிபுரம் ஒருநொடி அளவினில்
மந்தர வரிசிலை அதனிடை அரஅரி வாளியால்
வெந்தழி தரஎய்த விடலையர், விடமணி மிடறினர்
செந்தழல் நிறமுடை அடிகள்தம் வளநகர் சேறையே
(6)
மத்தரம் உறுதிறல் மறவர்தம் வடிவுகொடு உருவுடைப்
பத்தொரு பெயருடை விசயனை அசைவுசெய் பரிசினால்
அத்திரம் அருளுநம் அடிகளதணிகிளர் மணியணி
சித்திர வளநகர் செறிபொழில் தழுவிய சேறையே
(7)
பாடினர் அருமறை முறைமுறை பொருளென வருநடம்
ஆடினர் உலகிடை அலர்கொடும் அடியவர் துதிசெய
வாடினர் படுதலை இடுபலி அதுகொடு மகிழ்தரும்
சேடர்தம் வளநகர் செறிபொழில் தழுவிய சேறையே
(8)
கட்டுர மதுகொடு கயிலைநன் மலைமலி கரமுடை
நிட்டுரன் உடலொடு நெடுமுடி ஒருபது நெரிசெய்தார்
மட்டுர மலரடி அடியவர் தொழுதெழ அருள்செயும்
சிட்டர்தம் வளநகர் செறிபொழில் தழுவிய சேறையே
(9)
பன்றியர் பறவையர் பரிசுடை வடிவொடு படர்தர
அன்றிய அவரவர் அடியொடு முடியவை அறிகிலார்
நின்றிரு புடைபட நெடுவெரி நடுவெஓர் நிகழ்தரச்
சென்றுயர் வெளிபட அருளிய அவர்நகர் சேறையே
(10)
துகள்துறு விரிதுகில் உடையவர் அமணெனும் வடிவினர்
விகடமதுறுசிறு மொழியவை நலமில வினவிடல்
முகிழ்தரும் இளமதி அரவொடும் அழகுற முதுநதி
திகழ்தரு சடைமுடி அடிகள்தம் வளநகர் சேறையே
(11)
கற்றநன் மறைபயில் அடியவர் அடிதொழு கவினுறு
சிற்றிடை அவளொடும் இடமென உறைவதொர் சேறைமேல்
குற்றமில் புகலியுள் இகலறு ஞானசம்பந்தன
சொல் தகவுற மொழிபவர் அழிவிலர் துயர் தீருமே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page