(1)
பெருந்திரு இமவான் பெற்ற பெண்கொடி பிரிந்த பின்னை
வருந்து வான்தவங்கள் செய்ய மாமணம் புணர்ந்து மன்னும்
அருந்திருமேனி தன்பால் அங்கொரு பாகமாகத்
திருந்திட வைத்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே
(2)
ஓர்த்துளவாறு நோக்கி உண்மையை உணராக் குண்டர்
வார்த்தையை மெய்யென்றெண்ணி மயக்கில் வீழ்ந்தழுந்துவேனைப்
பேர்த்தெனை ஆளாக் கொண்டு பிறவி வான் பிணிகளெல்லாம்
தீர்த்தருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே
(3)
ஒன்றிய தவத்து மன்னி உடையனாய் உலப்பில் காலம்
நின்றுதம் கழல்கள் ஏத்து நீள்சிலை விசயனுக்கு
வென்றிகொள் வேடனாகி விரும்பி வெங்கானகத்துச்
சென்றருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே
(4)
அஞ்சையும் அடக்கி ஆற்றல் உடையனாய் அநேக காலம்
வஞ்சமில் தவத்துள் நின்று மன்னிய பகீரதற்கு
வெஞ்சின முகங்களாகி விசையொடு பாயும் கங்கை
செஞ்சடையேற்றார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே
(5)
நிறைந்த மாமணலைக் கூப்பி நேசமோடாவின் பாலைக்
கறந்து கொண்டாட்டக் கண்டு கறுத்ததன் தாதை தாளை
எறிந்த மாணிக்கப்போதே எழில்கொள் சண்டீசன் என்னச்
சிறந்த பேறளித்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே
(6)
விரித்தபல் கதிர்கொள் சூலம், வெடிபடு தமரு கங்கை
தரித்ததோர் கோல கால பயிரவனாகி வேழம்
உரித்துமை அஞ்சக் கண்டு ஒண்திரு மணிவாய் விள்ளச்
சிரித்தருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே
(7)
சுற்றுமுன் இமையோர் நின்று தொழுது தூமலர்கள் தூவி
மற்றெமை உயக்கொள் என்ன மன்னுவான் புரங்கள் மூன்றும்
உற்றொரு நொடியின் முன்னம் ஒள்ளழல் வாயின் வீழச்
செற்றருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே
(8)
முந்தியிவ் உலகமெல்லாம் படைத்தவன், மாலினோடும்
எந்தனி நாதனே என்றிறைஞ்சி நின்றேத்தல் செய்ய
அந்தமில் சோதி தன்னை அடிமுடி அறியா வண்ணம்
செந்தழலானார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே
(9)
ஒருவரும் நிகரிலாத ஒண்திறல் அரக்கன் ஓடிப்
பெருவரை எடுத்த திண்தோள் பிறங்கிய முடிகள்இற்று
மருவிஎம் பெருமான் என்ன மலரடி மெல்ல வாங்கித்
திருவருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...