திருச்சேறை – அப்பர் தேவாரம் (2):

<– திருச்சேறை

(1)
பூரியா வரும் புண்ணியம், பொய்கெடும்
கூரிதாய அறிவு கைகூடிடும்
சீரியார் பயில் சேறையுள் செந்நெறி
நாரி பாகன் தன் நாமம் நவிலவே
(2)
என்ன மாதவம் செய்தனை நெஞ்சமே
மின்னு வார்சடை வேத விழுப்பொருள்
செந்நெலார் வயல் சேறையுள் செந்நெறி
மன்னு சோதி நம்பால் வந்து வைகவே
(3)
பிறப்பு மூப்புப் பெரும்பசி வான்பிணி
இறப்பு நீங்கியிங்கு இன்பம் வந்தெய்திடும்
சிறப்பர் சேறையுள் செந்நெறியான் கழல்
மறப்பதின்றி மனத்தினுள் வைக்கவே
(4)
மாடு தேடி மயக்கினில் வீழ்ந்துநீர்
ஓடி எய்த்தும் பயனிலை ஊமர்காள்
சேடர் வாழ் சேறைச் செந்நெறி மேவிய
ஆடலான் தன் அடியடைந்து உய்ம்மினே
(5)
எண்ணி நாளும் எரியயில் கூற்றுவன்
துண்ணென் தோன்றில் துரக்கும் வழிகண்டேன்
திண்ணன் சேறைத் திருச்செந்நெறி உறை
அண்ணலார் உளர் அஞ்சுவதென்னுக்கே
(6)
தப்பி வானம் தரணி கம்பிக்கிலென்
ஒப்பில் வேந்தர் ஒருங்குடன் சீறிலென்
செப்ப மாஞ்சேறைச் செந்நெறி மேவிய
அப்பனார் உளர் அஞ்சுவது என்னுக்கே
(7)
வைத்த மாடும் மடந்தை நல்லார்களும்
ஒத்தொவ்வாத உற்றார்களும் என்செய்வார்
சித்தர் சேறைத் திருச்செந்நெறியுறை
அத்தர் தாமுளர் அஞ்சுவது என்னுக்கே
(8)
குலங்கள்என் செய்வ, குற்றங்கள்என் செய்வ
துலங்கி நீநின்று சோர்ந்திடல் நெஞ்சமே
இலங்கு சேறையில் செந்நெறி மேவிய
அலங்கனார் உளர் அஞ்சுவது என்னுக்கே
(9)
பழகினால் வரும் பண்டுள சுற்றமும்
விழவிடா விடில் வேண்டிய எய்தொணா
திகழ்கொள் சேறையில் செந்நெறி மேவிய
அழகனார் உளர் அஞ்சுவது என்னுக்கே
(10)
பொருந்து நீண்மலையைப் பிடித்து ஏந்தினான்
வருந்த ஊன்றி மலரடி வாங்கினான்
திருந்து சேறையில் செந்நெறி மேவியங்கு
இருந்த சோதி என்பார்க்கிடரில்லையே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page