திருச்செம்பொன்பள்ளி – சம்பந்தர் தேவாரம்:

<– திருச்செம்பொன்பள்ளி

(1)
மருவார் குழலி மாதோர் பாகமாய்த்
திருவார் செம்பொன்பள்ளி மேவிய
கருவார் கண்டத்தீசன் கழல்களை
மருவாதவர் மேல் மன்னும் பாவமே
(2)
வாரார் கொங்கை மாதோர் பாகமாய்ச்
சீரார் செம்பொன்பள்ளி மேவிய
ஏரார் புரிபுன் சடைஎம் ஈசனைச்
சேராதவர் மேல் சேரும் வினைகளே
(3)
வரையார் சந்தோடகிலும் வருபொன்னித்
திரையார் செம்பொன்பள்ளி மேவிய
நரையார் விடைஒன்றூரும் நம்பனை
உரையாதவர் மேல் ஒழியா ஊனமே
(4)
மழுவாளேந்தி மாதோர் பாகமாய்ச்
செழுவார் செம்பொன்பள்ளி மேவிய
எழிலார் புரிபுன் சடைஎம் இறைவனைத்
தொழுவார் தம்மேல் துயரமில்லையே
(5)
மலையான் மகளோடு உடனாய் மதிலெய்த
சிலையார் செம்பொன் பள்ளியானையே
இலையார் மலர்கொண்டு எல்லி நண்பகல்
நிலையா வணங்க நில்லா வினைகளே
(6)
அறையார் புனலோடகிலும் வருபொன்னிச்
சிறையார் செம்பொன்பள்ளி மேவிய
கறையார் கண்டத்தீசன் கழல்களை
நிறையால் வணங்க நில்லா வினைகளே
(7)
பையார் அரவேர் அல்குலாளொடும்
செய்யார் செம்பொன்பள்ளி மேவிய
கையார் சூலமேந்து கடவுளை
மெய்யால் வணங்க மேவா வினைகளே
(8)
வானார் திங்கள் வளர்புன் சடை வைத்துத்
தேனார் செம்பொன்பள்ளி மேவிய
ஊனார் தலையில் பலிகொண்டுழல் வாழ்க்கை
ஆனான் கழலே அடைந்து வாழ்மினே
(9)
காரார் வண்ணன் கனகம் அனையானும்
தேரார் செம்பொன்பள்ளி மேவிய
நீரார் நிமிர்புன் சடைஎம் நிமலனை
ஓராதவர் மேல் ஒழியா ஊனமே
(10)
மாசார் உடம்பர் மண்டைத் தேரரும்
பேசா வண்ணம் பேசித் திரியவே
தேசார் செம்பொன்பள்ளி மேவிய
ஈசா என்ன நில்லா இடர்களே
(11)
நறவார் புகலி ஞானசம்பந்தன்
செறுவார் செம்பொன்பள்ளி மேயானைப்
பெறுமாறிசையால் பாடல் இவைபத்தும்
உறுமா சொல்ல ஓங்கி வாழ்வரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page