திருச்செம்பொன்பள்ளி – அப்பர் தேவாரம் (1):

<– திருச்செம்பொன்பள்ளி

(1)
ஊனினுள் உயிரை வாட்டி உணர்வினார்க்கெளியராகி
வானினுள் வானவர்க்கும் அறியலாகாத வஞ்சர்
நானெனில்தானே என்னும் ஞானத்தார் பத்தர் நெஞ்சுள்
தேனும் இன்னமுதுமானார் திருச்செம்பொன் பள்ளியாரே
(2)
நொய்யவர் விழுமியாரும், நூலின் நுண்ணெறியைக் காட்டும்
மெய்யவர் பொய்யும் இல்லார், உடலெனும் இடிஞ்சி தன்னில்
நெய்யமர் திரியுமாகி, நெஞ்சத்துள் விளக்குமாகிச்
செய்யவர், கரிய கண்டர், திருச்செம்பொன் பள்ளியாரே
(3)
வெள்ளியர் கரியர் செய்யர், விண்ணவர் அவர்கள் நெஞ்சுள்
ஒள்ளியர், ஊழியூழி உலகமதேத்த நின்ற
பள்ளியர், நெஞ்சத்துள்ளார் பஞ்சமம் பாடியாடும்
தெள்ளியார், கள்ளம் தீர்ப்பார் திருச்செம்பொன் பள்ளியாரே
(4)
தந்தையும் தாயுமாகித் தானவன் ஞான மூர்த்தி
முந்திய தேவர் கூடி முறைமுறை இருக்குச் சொல்லி
எந்தைநீ சரணம் என்றங்கிமையவர் பரவியேத்தச்
சிந்தையுள் சிவமதானார் திருச்செம்பொன் பள்ளியாரே
(5)
ஆறுடைச் சடையர் போலும், அன்பருக்கன்பர் போலும்
கூறுடை மெய்யர் போலும், கோளர அரையர் போலும்
நீறுடை அழகர் போலும், நெய்தலே கமழு நீர்மைச்
சேறுடைக் கமலவேலித் திருச்செம்பொன் பள்ளியாரே
(6)
ஞாலமும் அறிய வேண்டில் நன்றென வாழலுற்றீர்
காலமும் கழியலான கள்ளத்தை ஒழியகில்லீர்
கோலமும் வேண்டா ஆர்வச் செற்றங்கள் குரோத நீக்கில்
சீலமும் நோன்புமாவார் திருச்செம்பொன் பள்ளியாரே
(7)
புரிகாலே நேசம் செய்ய இருந்த புண்டரீகத்தாரும்
எரிகாலே மூன்றுமாகி இமையவர் தொழநின்றாரும்
தெரிகாலே மூன்றுசந்தி தியானித்து வணங்க நின்று
திரிகாலம்  கண்ட எந்தை திருச்செம்பொன் பள்ளியாரே
(8)
காருடைக் கொன்றை மாலை கதிர்மதி அரவினோடும்
நீருடைச் சடையுள் வைத்த நீதியார், நீதியுள்ளார்
பாரொடு விண்ணு மண்ணும் பதினெட்டுக் கணங்களேத்தச்
சீரொடு பாடலானார் திருச்செம்பொன் பள்ளியாரே
(9)
ஓவாத மறைவல்லானும், ஓதநீர் வண்ணன் காணா
மூவாத பிறப்பிலாரும் முனிகள்ஆனார்கள் ஏத்தும்
பூவான மூன்று முந்நூற்றறுபதும் ஆகும் எந்தை
தேவாதி தேவரென்றும் திருச்செம்பொன் பள்ளியாரே
(10)
அங்கங்கள்ஆறும் நான்கும் அந்தணர்க்கருளிச் செய்து
சங்கங்கள் பாட ஆடும் சங்கரன் மலையெடுத்தான்
அங்கங்கள் உதிர்ந்து சோர அலறிட அடர்த்து நின்றும்
செங்கண் வெள்ளேறதேறும் திருச்செம்பொன் பள்ளியாரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page