திருச்செம்பொன்பள்ளி – அப்பர் தேவாரம் (2):

<– திருச்செம்பொன்பள்ளி

(1)
கானறாத கடிபொழில் வண்டினம்
தேனறாத திருச்செம்பொன் பள்ளியான்
ஊனறாததோர் வெண்தலையில் பலி
தானறாததோர் கொள்கையன் காண்மினே
(2)
என்பும் ஆமையும் பூண்டங்குழிதர்வர்க்கு
அன்பும் ஆயிடும் ஆயிழையீர் இனிச்
செம்பொன் பள்ளியுளான் சிவலோகனை
நம்பொன் பள்ளிஉள்க வினை நாசமே
(3)
வேறு கோலத்தர் ஆணலர் பெண்ணலர்
கீறு கோவண ஐதுகிலாடையர்
தேறலாவது ஒன்றன்று செம்பொன்பள்ளி
ஆறு சூடிய அண்ணல் அவனையே
(4)
அருவராததோர் வெண்தலை ஏந்திவந்து
இருவராயிடுவார் கடை தேடுவார்
தெருவெலாம் உழல்வார் செம்பொன் பள்ளியார்
ஒருவர்தாம் பல பேருளர் காண்மினே
(5)
பூவுலாம் சடைமேல் புனல் சூடினான்
ஏவலால் எயில் மூன்றும் எரித்தவன்
தேவர் சென்றிறைஞ்சும் செம்பொன் பள்ளியான்
மூவராய் முதலாய் நின்ற மூர்த்தியே
(6)
சலவராய்ஒரு பாம்பொடு தண்மதிக்
கலவராவதின் காரணம் என்கொலோ
திலக நீள்முடியார் செம்பொன் பள்ளியார்
குல வில்லால் எயில் மூன்றெய்த கூத்தரே
(7)
கைகொள் சூலத்தர், கட்டுவாங்கத்தினர்
மைகொள் கண்டத்தராகி இருசுடர்
செய்ய மேனி வெண்ணீற்றர், செம்பொன் பள்ளி
ஐயர்கையதோர் ஐந்தலை நாகமே
(8)
வெங்கண் நாகம் வெருவுற ஆர்த்தவர்
பைங்கண் ஆனையின் ஈருரி போர்த்தவர்
செங்கண் மால்விடையார் செம்பொன் பள்ளியார்
அங்கணாய் அடைந்தார் வினை தீர்ப்பரே
(9)
நன்றி நாரணன் நான்முகன் என்றிவர்
நின்ற நீள்முடியோடு அடி காண்புற்றுச்
சென்று காண்பரியான் செம்பொன் பள்ளியான்
நின்ற சூழலில் நீள் எரியாகியே
(10)
திரியும் மும்மதில் செங்கணை ஒன்றினால்
எரிய எய்த அனலோட்டி, இலங்கைக்கோன்
நெரிய ஊன்றியிட்டார் செம்பொன் பள்ளியார்
அரிய வானம் அவரருள் செய்வரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page